;
Athirady Tamil News

19 மாநில சட்டசபைகளில் 10 சதவீதத்துக்கும் குறைவான பெண் எம்.எல்.ஏ.க்கள் – மத்திய சட்ட மந்திரி தகவல்..!!

0

நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி.க்கள், மாநில சட்டசபைகளில் பெண் எம்.எல்.ஏ.க்களின் பிரதிநிதித்துவம் குறித்தும், அவர்களின் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா என்பது குறித்தும் மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு, ‘பீகார், சத்தீஷ்கார், அரியானா, ஜார்கண்ட் உள்ளிட்ட 10 மாநிலங்களில் 10 சதவீதத்துக்கும் அதிகமான பெண் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அதேவேளையில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட 19 மாநில சட்டசபைகளில் 10 சதவீதத்துக்கும் குறைவான பெண் எம்.எல்.ஏ.க்களே இருக்கின்றனர். சமீபத்தில் தேர்தல் நடைபெற்ற குஜராத்தில் பெண் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 8.2 சதவீதமாக உள்ளது. அதேநேரம் இமாசலபிரதேசத்தில் சட்டசபைக்கு ஒரே ஒரு பெண் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். நாடு முழுவதுமாக பார்த்தால் சராசரியாக 8 சதவீத பெண் எம்.எல்.ஏ.க்கள்தான் இருக்கின்றனர். பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கை மக்களவையில் 14.94 சதவீதமாகவும், மாநிலங்களவையில் 14.05 சதவீதமாகவும் உள்ளது’ என்று கூறினார். நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை கொண்டுவரும் திட்டம் அரசுக்கு உள்ளதா என்றும் அபிஷேக் பானர்ஜி கேள்வி எழுப்பினார். அதற்கு சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு, ‘இதுதொடர்பான அரசியல்சாசன திருத்தச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவரும் முன், அதுகுறித்த ஒருமித்த கருத்து ஏற்படும் வகையில் அனைத்து கட்சிகளும் கவனமாக விவாதிக்க வேண்டும்’ என்று பதில் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.