தமிழகத்தில் விதிமுறைகளை பின்பற்றாத சாய ஆலைகள் மீது நடவடிக்கை- மத்திய அரசு தகவல்..!!
பாராளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய சுற்றுச் சூழல் துறை இணை மந்திரி அஸ்வினி குமார் சௌபே கூறியதாவது: தமிழகத்தில் நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் சாய ஆலைகளில் ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த மண்டல அலுவலகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பிரதிநிதிகள், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பிரதிநிதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவினர் இந்த ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 44 சாய ஆலைகளில் கூட்டு ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வின்போது 25 ஆலைகளில் முறையான கழிவு நீர் வெளியேற்ற வசதி இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. சில ஆலைகளில் எதிர்மறை சவ்வூடுபரவல் முறை செயல்படாமல் இருப்பது கண்டறியப்பட்டது. சில ஆலைகளில் சூரிய சக்தி ஆவியாதல் அமைப்பு முறை செயல்படாமல் இருப்பது கண்டறியப்பட்டது. விதிமுறைகளின் படி செயல்படாத சாய ஆலைகள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகுந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.