இடைத்தரகர்கள் தலையீட்டை தடுக்க வேண்டும்..!!
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர், கோலார் மாவட்டத்தில் அதிகப்படியாக பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக சிக்பள்ளாப்பூர் மாவட்டம், சிட்லகட்டா தாலுகாவில் சர்வதேச அளவில் பட்டு கூடு விற்பனை செய்யும் ஏ.பி.எம்.சி. மார்க்கெட் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களை சேர்ந்த பட்டு உற்பத்தியாளர்கள் மட்டும் இன்றி வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பட்டு கூடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். ஆரம்பத்தில் சிட்லகட்டா பட்டு கூடு விற்பனை ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் எந்த ஒரு இடைத்தரகர்களும் வருவதில்லை. அதனால், விவசாயிகள் விற்பனை செய்யும் பட்டு கூடுகளுக்கான சேவை வரி அரசுக்கு நேரடியாக சென்று கொண்டிருந்தது. ஆனால், தற்போது அதிக அளவில் இடைத்தரகர்களின் தலையீடு உள்ளது. இதனால் அரசுக்கு வரவேண்டிய சேவைவரி கிடைப்பது இல்லை. குறிப்பாக 2021-22-ம் ஆண்டில் பட்டு கூடுகளை ஏற்றி வரும் லாரிகளின் வரத்து குறைந்தது. இதனால் அரசுக்கு கிடைக்கவேண்டிய சேவை வரி குறைந்தது. இதற்கு அதிகாரிகளும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. இடைத்தரர்களிடம் இருந்து அதிகளவு பணம் பெற்று கொண்டு,விவசாயிகளுக்கு மோசடி செய்கின்றனர். அந்த அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.