அல்வாயில் மோதல் ; காயமடைந்தவர்களை மீட்க சென்ற நோயாளர் காவு வண்டி மீதும் தாக்குதல்! (PHOTOS)
இரு கும்பல்களுக்கு இடையிலான மோதலில் காயமடைந்தவர்களை அங்கிருந்து மீட்டு , வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட நோயாளர் காவு வண்டி மீதும் வன்முறை கும்பல் தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன் , அதில் இருந்த உயிர்காப்பு பணியாளர்களையும் அச்சுறுத்தி உள்ளனர்.
யாழ்ப்பாணம், பருத்தித்துறை அல்வாய் வடக்கு பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
மோதல் சம்பவத்தில் காயமடைந்தவர்களை அங்கிருந்து மீட்டு , வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட நோயாளர் காவு வண்டிக்கு , வன்முறை கும்பல் இடையூறுகளை ஏற்படுத்தி , உயிர்க்காப்பு பணியாளர்களையும் அச்சுறுத்தியுள்ளனர்.
குறித்த வன்முறை கும்பலிடம் இருந்து நோயாளர் காவு வண்டி சாரதி சாதுரியமாக நோயாளர் காவு வண்டியை அங்கிருந்து நகர்த்த முற்பட்ட வேளை நோயாளர் காவு வண்டி மீது வன்முறை கும்பல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
அதனை அடுத்து சாரதி காயமடைந்தவர்களை ஏற்றியவாறு அங்கிருந்து நோயாளர் காவு வண்டியை சாமர்த்தியமாக நகர்த்தி தப்பியோடி வைத்தியசாலையில் காயமடைந்தவர்களை அனுமதித்துள்ளார்.
நோயாளர் காவு வண்டி மீதான தாக்குதல் மற்றும் , பணியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.