பீகாரில் கள்ளச்சாராய பலி 65 ஆக உயர்வு- இழப்பீடு எதுவும் கிடையாது என நிதிஷ் குமார் திட்டவட்டம்..!!
பூரண மது விலக்கு அமலில் உள்ள பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராய பயன்பாடு அதிக அளவில் உள்ளது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அவ்வகையில், பீகாரில் உள்ள சரண் மாவட்டத்தில் உள்ள சாப்ரா என்ற பகுதியில் சமீபத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் 65 பேர் உயிரிழந்தது உறுதி செய்யபபட்டுள்ளது. இது, மது விலக்கு நடைமுறைக்கு வந்த பிறகு ஏற்பட்ட மிகவும் துயரமான சம்பவம் ஆகும். இந்த விவகாரம் அம்மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. தற்போது சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சியான பாஜக இது குறித்து அவையில் பல்வேறு கேள்விகளை எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. பாஜகவின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் நிதிஷ் குமார், “கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிதி உதவி அளிக்காது. மது குடித்தால் இறந்துவிடுவீர்கள் என மக்களிடம் நாங்கள் கூறி வருகிறோம். மது குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதில் இருந்து விடுபட வேண்டும்” என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ‘இது எங்குதான் நடக்கவில்லை? அரியானா, உத்தரபிரதேசம் என எங்கு சென்றாலும் அதே கதைதான். மற்ற இடங்களில் அவர்கள் இறக்கும்போது ஏன் தகவல் வெளிவருவதில்லை? நான் எல்லா இடங்களிலும் மீண்டும் வலியுறுத்துகிறேன், யாராவது மதுவுக்கு ஆதரவாக பேசினால், அது ஒருபோதும் பயனளிக்காது. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற அவலங்கள் நடக்கும்போது ஊடகங்கள் பெரிதாக காட்டுகின்றன’ என்றார்.