கடனுக்கு மதுபான போத்தல் கேட்ட காவல்துறை அதிகாரி – வழங்க மறுத்த உரிமையாளர் மீது கத்தி குத்து !!
கொஹூவளை பகுதியில் கடனுக்கு மதுபானம் வழங்க மறுத்த மதுபான கடை உரிமையாரை காவல்துறை அதிகாரி ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார்.
காயமடைந்த மதுபான விற்பனை நிலையத்தின் உரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொஹூவளை 120 பேருந்து செல்லும் வழியில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையத்தின் உரிமையாளரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
கொஹூவலை காவல் நிலையத்தின் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரியின் தேவைக்கு எனக்கூறி மதுபான விற்பனை நிலையத்திற்கு சென்று கடனுக்கு மதுபான போத்தல் ஒன்றை பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளார்.
கடனுக்கு மதுபானம் வழங்க மறுத்ததை அடுத்து திரும்பிச் சென்ற அந்த நபர், கொஹூவளை காவல் நிலையத்தின் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரியுடன் மீண்டும் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு தன்னை கத்தியால் குத்தியதாக மதுபான விற்பனை நிலையத்தின் உரிமையாளர் கூறியுள்ளார்.
சிவில் உடையில் உந்துருளியில் மதுபான விற்பனை நிலையத்திற்கு அருகில் வந்த காவல்துறை அதிகாரி, காவல்துறையினருக்கு ஏன் கடனுக்கு மதுபானத்தை வழங்க முடியாது என கேட்டுக்கொண்டிருந்த போது, அவருடன் வந்த நபர் தனக்கு பின்னால் இருந்து கத்தியால் குத்தியதாகவும் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
சம்பவத்தின் பின்னர், காவல்துறை அதிகாரியும் அவருடன் வந்தவரும் திரும்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து காயமடைந்த மதுபான விற்பனை நிலையத்தின் உரிமையாளரை,அதன் முகாமையாளர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளர்.
மதுபான விற்பனை நிலையத்தில் உள்ள சிசி டிவி கெமராவில் பதிவாகியுள்ளதாக கூறப்படும் இந்த கத்தி குத்து சம்பவத்தின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.