பெருந்தோட்ட காணிகள் பறிபோகும் அபாயம்!!
பெருந்தோட்ட காணிகள் பறிபோகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பதற்கு அவசியமான முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்க்கு பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. அதில் பிரதானமானதாக ஜனாதிபதியின் தலைமையிலான உணவு பாதுகாப்பு வேலை திட்டம் அமைந்திருக்கின்றது.
இத் திட்டத்தின் பின்னணியில் பெருந்தோட்டங்களில் காணப்படும் பயிரிடப்படாத காணிகளை பகிர்ந்தளிப்பது தொடர்பாக பேசப்படுகின்றது.
இந்நிலையில் பெருந்தோட்ட காணிகள் எமது மக்களிடம் இருந்து பறிபோகும் அபாய நிலை தோன்றியுள்ளது. இதனை தடுப்பதற்கான பொருத்தமான வேலை திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும்.
உணவு பாதுகாப்பிற்காக பிரதேச செயலக மட்டத்திலே குழுக்கள் அமைக்கப்படுகின்றது. அப்பிரதேச செயலக பிரிவில் பயிரிடப்படாது இருக்கின்ற காணிகளை இனம் காண்பதற்கும் அவற்றை தேவையுடையோருக்கு பகிர்ந்தளிப்பதற்கும், அக்காணிகளில் பயிரிடுவதற்கு அவசியமான வசதிகளை ஏற்பாடு செய்வதற்கும் இக்குழுக்களுக்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது.
அதன் போது, பெருந்தோட்டங்கள் காணப்படும் பகுதிகளில் அங்கு காணப்படும் பயிரிடப்படாத நிலங்களும் பகிரப்படவுள்ளது. இதன் போது பெருந்தோட்ட காணிகள் வெளியாருக்கு பகிர்ந்தளிப்பதற்க்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளது.
இந்நிலைமையை தடுக்க முன்கூட்டியே நாம் செயற்பட வேண்டும். பெருந்தோட்ட காணிகளின் பகிர்வு தொடர்பாக விசேட பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும். ஒவ்வாறில்லாது பிரதேச அரசியல்வாதிகளிடம் இந்நிகழ்ச்சித்திட்டம் ஒப்படைக்கப்பட்டால் அது பாரிய சிக்கலை ஏற்படுத்துவதாக அமையும்.
மலையக பெருந்தோட்டங்களில் பெருமளவு இளைஞர்கள் யுவதிகள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். அங்கு காணப்படும் காணிகள் அவர்களுக்கே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அதற்கான வேலை திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாத நிலையில் எமது மக்கள் ஓரம்கட்டப்பட்டு வெளியார்கள் உள்வாங்கப்படுவது சாதாரணமாக இடம்பெற முடியும்.
இன்றைய அரசாங்கத்திலும் மலையக பிரதிநிதிகள் பங்காளிகளாக இல்லை. இவ்வாறான சூழ்நிலையில் முன்கூட்டியே திட்டமிட்டு இயங்குவதன் மூலமே எமது இருப்பை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும். அதனை விடுத்து தெரிந்தும் தெரியாதது போல் இருப்பதற்கு மக்கள் எமக்கு வாக்களித்து பிரதிநிதிகளாக தெரிவுசெய்யவில்லை என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.