‘ரெடிமேடு’ ஆடைகள் வரவு அதிகரிப்பு; தையல் தொழில் நலிவடைகிறதா..!!
பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், பெருநாள் போன்ற பண்டிகை காலங்களில் தையல் கடைகளில் துணிமணிகள் மலைபோல் குவிந்து கிடக்கும். தையல் கலைஞர்கள் இரவு, பகலாக துணிகளை தைப்பார்கள். காலப்போக்கில் நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப ‘ரெடிமேடு’ என்று சொல்லப்படும் ஆயத்த ஆடைகள் அறிமுகமாகின. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான அனைவருக்கும் இந்த ஆயத்த ஆடைகள் கிடைக்கின்றன. கடைகளுக்கு நேரடியாகச் சென்று, விருப்பமான உடையை, விரும்பிய கலரில் தேர்வு செய்து, கண்ணாடி முன் நின்று அணிந்து அழகு பார்க்கும் வசதி இருக்கிறது. இதனால் துணி எடுத்து தைத்து அணிய வேண்டும் என்ற பழக்கம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக தையல் தொழில் நசிந்து வருகிறதோ? தையல் கலைஞர்கள் நலிந்து வருகிறார்களோ? என்ற சந்தேகங்கள் எழுந்து வருகின்றன. அதே நேரம் ரெடிமேடாகவே தைத்தாலும் அதையும் தொழிலாளர்கள்தானே தைக்கிறார்கள். பெண்களுக்கான பிளவுசுகள் ரெடிமேடாக வந்தாலும் இளம் பெண்கள் மாடலாக தைத்து அணிவதைத்தான் விரும்புகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
அதை உறுதிப்படுத்தும் வகையில் பெண்களுக்கு பிளவுசுகள் தைக்க பிரத்தியேகமாக நிறையக் கடைகள் முளைத்திருக்கின்றன. திருமணம் மற்றும் விழாக்களின் போது பெண்கள் கட்டும் சேலைகளுக்கு மேட்சாக, பிளவுசுகளில் முத்துக்களை கோத்தாற்போல் பாசிகளில், பல வண்ண சித்திர வேலைப்பாடுகள் செய்து தருகிறார்கள். ‘ஆரி ஒர்க்’ என்று இதைச் சொல்கிறார்கள். அவ்வாறு வேலைப்பாடுகளுடன் ஒரு பிளவுசு தைக்க ஆயிரம், இரண்டாயிரம் அல்ல; ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என கூலி ஆகுமாம். எனவே தையல் தொழில் நசிந்து வருகிறதா? நாகரிகத்திற்கு ஏற்றவாறு வேறு போக்கில் வளர்ந்து இருக்கிறதா? தையல் கலைஞர்களின் நிலை என்ன? என்பது குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-
கடன் உதவி கிடைப்பது இல்லை
ராஜாஜிநகர் 6-வது பிளாக்கில் தையல் கடை நடத்தி வரும் ஜனார்த்தன், “நான் கடந்த 30 வருடமாக தையல் கடை நடத்தி வருகிறேன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அனைவரும் துணிகளை வாங்கி தைய்த்து தான் அணிந்து வந்தனர். தற்போது வாலிபர்கள் யாரும் துணிகளை தைத்து அணிவது இல்லை. ரெடிமேடு துணிகளை வாங்க தான் அதிகமாக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் துணிகளை தைத்து தான் அணிகின்றனர். ரெடிமேடு ஆடைகளால், தையல் தொழிலாளிகளின் வாழ்க்கை பாதிக்கப்பட்டு விட்டது என்று கூற முடியாது.
நானே துணி வாங்கி தைத்து கொடுக்கும் சட்டைகளுக்கு ரூ.550-ம், பேன்டுக்கு ரூ.700-ம் வாங்கி வருகிறேன். வாடிக்கையாளர் கொடுக்கும் துணிகளில் சட்டை தைத்து கொடுக்க ரூ.350-ம், பேன்டிற்கு ரூ.500-ம் வாங்குகிறேன். எனக்கு அரசிடம் இருந்து கடன் உதவி பெறும் திட்டம் இல்லை. பெரிய கடை வைத்திருப்பவர்கள் தான் வருமான வரி கட்டி வருகின்றனர். அவர்களுக்கு தான் அரசின் சலுகைகள் கிடைக்கிறது. என்னை போல சிறிய தையல் கடை நடத்தி வருபவர்களுக்கு எந்த சலுகையும், நலத்திட்டங்களும் இல்லை” என்றார்.
தையல் தொழில் அழிந்து விடும்
ராஜாஜிநகர் கருமாரியம்மன் கோவில் ரோட்டில் தையல் கடை நடத்தி வரும் கோபி, “எனது குடும்பத்தினர் 3 தலைமுறையாக தையல் கடை நடத்தி வருகிறோம். நான் கடந்த 43 ஆண்டுகளாக தையல் கடை வைத்து உள்ளேன். முன்பு போல தற்போது தையல் கடைகளுக்கு வாடிக்கையாளர் வருவது இல்லை. ரெடிமேடு ஆடைகள் மீதான மோகத்தால் பெரும்பாலோனார் தையல் கடைகளை மறந்தே போய் விட்டனர். இன்னும் 15 முதல் 20 ஆண்டுகளில் தையல் தொழில் முற்றிலும் அழிந்து போனாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் கடை வைத்து உள்ள பகுதியிலேயே 15 தையல் கடைகள் இருந்தன. தற்போது எனது கடை உள்பட வெறும் 4 தையல் கடைகள் தான் உள்ளது. அரசிடம் இருந்து தையல் தொழிலாளிகளுக்கு இதுவரை எந்த உதவியும் கிடைத்தது இல்லை. நாங்கள் உழைத்து தான் குடும்பத்தை காப்பாற்றி வருகிறோம்.
தையல் தொழிலாளிகள் சங்கம் சிக்பேட்டையில் உள்ளது. அங்கு இருந்து எங்களுக்கு கடன் உதவி கிடைக்கிறது. ரூ.1 லட்சம் கடன் வாங்கினால் அதை செலுத்த 100 மாதங்கள் வரை காலஅவகாசம் தருகின்றனர். தற்போது தொழிலநுட்பம் வேகமாக வளர்ந்து விட்டது. தையல் பற்றி தெரியாதவர்கள் எல்லாம் தையல்காரர்கள் ஆகிவிட்டார்கள். யூ-டியூப்பில் வீடியோ பார்த்து துணிகளை தைத்து கொடுக்கின்றனர். டிரெண்டிங், டிரெண்டிங் என்று கூறிக்கொண்டு துணிகளை அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர். ஆனால் அதிக விலை கொடுத்து வாங்கும் ரெடிமேடு துணிகள் ஒரு வருடம் கூட தாக்குப்பிடிப்பது இல்லை. துணிகள் வாங்கி தைக்கும் உடைகள் பல ஆண்டுகள் தாக்குப்பிடிக்கிறது” என்றார். பெண்களுக்கு ஆர்வம் பெங்களூரு பாஷியம் சர்க்கிளில் ஆரி ஒர்க் தொழில் நடத்தி வரும் ஷகீல், “எனது தையல் கடையில் பெண்களுக்கு பிளவுசுகள் தைத்து கொடுக்கிறேன். முன்பு பெண்கள் துணி வாங்கி கொண்டு எனது கடைக்கு வந்து பிளவுசுக்கு அளவு கொடுத்துவிட்டு செல்வார்கள். தற்போது பெண்கள் ரெடிமேடு பிளவுசுகளை வாங்கி கொள்கின்றனர். இதனால் பிளவுசு தைக்கும் தொழிலில் சற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஆனால் பிளவுசுக்கு ஆரி ஒர்க் செய்து கொடுக்கும் தொழில் நன்றாக நடந்து வருகிறது. திருமண நிகழ்ச்சிகள் உள்பட சுபகாரியங்களின் போது பெண்கள் தங்களை முன்னிலைப்படுத்தி காட்ட ஆரி ஒர்க் பிளவுசுகளை அணிவதில் தற்போது அதிக ஆர்வம் காட்டுகின்றனர். பெண்கள் பிளவுசு துணிகளை வாங்கி கொண்டு எனது கடைக்கு வந்து அவர்களுக்கு பிடித்த ஆரி மாடல்களை தேர்வு செய்து கொடுத்து விட்டு செல்வார்கள். எனது கடையில் ரூ.1,800 முதல் ரூ.40 ஆயிரம் வரை ஆரி ஒர்க் செய்து கொடுத்து வருகிறேன். ஜனவரி முதல் ஏப்ரல் வரை தொழில் நன்றாக இருக்கும். அதன்பின்னர் தொழில் சுமாராக தான் இருக்கும்” என்றார். கேள்விக்குறியான வாழ்க்கை தட்சின கன்னடா மாவட்டம் மங்களூரு சூரத்கல் பகுதியில் தையல் கடை நடத்தி வரும் ரச்சனா, “தற்போது பெண்கள் கடைகளுக்கு செல்லாமல் ஆன்லைன் மூலமாக ரெடிமேடு பிளவுசுகள் வாங்கி கொள்கின்றனர். பெண் வாடிக்கையாளர் வருகை குறைவால் தையல் தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. முன்பு துணிகளை வாங்கி வந்து எங்களிடம் கொடுத்து சுடிதார், பிளவுசுகள் தைத்து கொள்வார்கள். தற்போது மேற்கத்திய கலாசாரத்தில் மூழ்கி உள்ள இளம்பெண்கள் ரெடிமேடு சுடிதார்கள், லெக்கின்ஸ் பேன்ட்டுகளை வாங்கி கொள்கின்றனர். கொரோனாவுக்கு பின்னர் தையல் தொழில் சுத்தமாக முடங்கி விட்டது. தற்போது தையல் தொழிலாளர்களுக்கு வாழ்க்கை நடத்துவதே கேள்விக்குறியாக உள்ளது. கஷ்டத்தில் இருக்கும் தையல் தொழிலாளிகளுக்கு உதவி செய்ய அரசு முன்வர வேண்டும்” என்றார். 6 மாதம் அணிந்தால் போதும் ரெடிமேடு ஆடைகள் பயன்படுத்துவது குறித்து சில வாலிபர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் கூறியதாவது:- ரெடிமேடு சட்டைகள் தற்போது ரூ.350 ரூபாய்க்கு கிடைக்கிறது. தைத்து போடும் சட்டைக்கு முதலில் ரூ.300 கொடுத்து துணி வாங்க வேண்டும். பின்னர் அதை தைய்க்க ரூ.250 செலவு செய்ய வேண்டும். இது எல்லாம் தேவையா? ரூ.350 கொடுத்து சட்டையை வாங்கி 6 மாதம் அணிந்தால் கூட போதும். அதற்கு பின்னர் வேறு சட்டையை ரூ.350-க்கு வாங்கி கொள்ளலாம். இன்றைய நவீன காலக்கட்டத்தில் துணிகளை தைய்த்து போட்டால் உடன் இருப்பவர்களே கிண்டல் செய்யும் நிலை உள்ளது. இதில் இருந்து விடுபடவே ரெடிமேடு டிரெண்டிங் ஆக உள்ள உடைகளை வாங்கி அணிய வேண்டி உள்ளது என்றனர். எதற்காக தைக்க வேண்டும்? இளம்பெண்கள் தங்களது கருத்துகளை கூறும்போது, “துணிக்கடைக்கு சென்று துணிவாங்கி வந்து பின்னர் அந்த துணியை தைத்து சுடிதார், பிளவுசுகள் அணிந்து கொள்வது எல்லாம் பழைய காலம். ‘தற்போது துணிக்கடைக்கு சென்றோமா, நமக்கு பிடித்த சுடிதார், லெக்கின்ஸ் பேன்ட்டுகளை வாங்கினோமா” என்று இருக்க வேண்டும். ரூ.100-க்கு கூட லெக்கின்ஸ் பேன்ட் கிடைக்கிறது. லெக்கின்ஸ் பேன்ட்டுகள் சவுகரியமாக இருக்கிறது. இதனால் எதற்கு துணி வாங்கி பேன்ட்டுகளை தைய்த்து போட வேண்டும். திருமண நிகழ்ச்சிகள் உள்பட சுபகாரியங்களின் போது மற்ற பெண்களிடம் இருந்து நம்மை தனியாக காட்டுவதற்கு ஆரி ஒர்க்குடன் கூடிய பிளவுசுகள் அணிகிறோம். அடிக்கடி சுபநிகழ்ச்சிகள் வருவது இல்லை. இதனால் ரூ.3 ஆயிரம் கொடுத்து ஆரி ஒர்க்குடன் கூடிய பிளவுசுகள் வாங்கி அணிவதில் தவறு இல்லை என்றனர். என்னதான் ரெடிமேடு ஆடைகள் வந்தாலும், துணியை எடுத்து தையல் தொழிலாளியிடம் தைத்து உடுத்துவதை இன்னும் சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் ரெடிமேடு ஆடை விலையை காட்டிலும் தையல் தொழிலாளர்கள் கேட்கும் தையல் கூலி அதிகம் என்ற ஆதங்கமும் மக்களிடையே இருக்கிறது.