அறிவார்ந்தவர்களுக்கு சிறைச்சாலை ஒரு பல்கலைக்கழகம்!!
உலக வர்த்தக கட்டடத்தில் 34ஆவது மாடியில் காரியாலயத்தை நிறுவி, சுமார் 130 கோடி ரூபாயை மோசடி செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த சகல வழக்குகளிலும் பிணை கிடைத்துள்ளது.
ஆகையால், அவரை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த திலினி பிரியமாலி,
“நான் நன்றாக இருந்தேன், சிறைக்குள் ஓய்வெடுத்தேன். நடந்த சம்பவங்களால் எனது எதிர்காலம் பாதிக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை” என்றார்.
“நான் நலமாக உள்ளேன். சிறைக்குள் மிகவும் நிம்மதியாக இருந்தேன். எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது எப்படி என்று தெரியவில்லை. இது அறிவிக்கப்பட்ட அளவுக்கு தீவிரமானது அல்ல. சிறைச்சாலையில் நான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது என்ன நடந்தது என்பது ஊடகங்களில் வெளியிடப்பட்டதைப் போல தீவிரமானது அல்ல.
பேசி தீர்த்துக்கொள்ளக்கூடிய பிரச்சினைகள் அவை. நான் ஏன் இவ்வளவு பிரபலமானேன் என்று எனக்குத் தெரியவில்லை. இவை இரண்டரை மாதங்களாக ஊடகங்களில் வெளிவந்தன. நான் செய்தவை, செய்யாதவை எல்லாம் ஊடகங்கள் மூலம் செய்திகளாக வெளியாகின. எனக்கு ஒரு பெரிய அநியாயம் நடந்தது. என்னுடன் பழகியவர்கள் என் மீது கோபமாக இருந்தால், அவர்கள் எனக்கு நல்லது சொல்ல மாட்டார்கள். எனது எதிர்காலம் பாதிக்கப்படவில்லை என்று நினைக்கிறேன். நிறைய அனுபவம் கிடைத்தது.
ஒரு நபராக, அனுபவம் எனது அறிவை அதிகரித்தது. அறிவார்ந்த மக்களுக்கு இது ஒரு நல்ல பல்கலைக்கழகம்” என்றார்.