;
Athirady Tamil News

மாவையை தலைவராக ஏற்றுக்கொள்ளத் தயாராகும் விக்னேஸ்வரன்!

0

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவைத் தலைவராகக் கொண்டு தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் செயற்பட வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

“இலங்கைத் தமிழரசுக் கட்சியில் உள்ள சுயநலவாதிகளே தமிழ் மக்களின் ஒற்றுமைக்கு எதிராகச் செயற்படுகின்றனர்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ்த் தேசியக் கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சி குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“தமிழ்த் தரப்புகளுக்குள் பிரிவினை இருப்பதால் தான் சிங்கள அரசுகள் எம்மை ஏமாற்ற முடிந்தது. நமக்கு ஒற்றுமை இருக்கின்றது என்பதைக் கண்டால் அவர்களின் அணுகுமுறையில் மாற்றம் இருக்கும் என நம்புகின்றோம்.

இப்போதும் தமிழ்த் தரப்பில் சிலர் தான், தனித்துப் போக வேண்டும் என கூறுகின்றார்கள். ஆனால், தமிழ்த் தேசியக் கட்சிகளை இயன்ற வரை ஒன்றிணைத்துச் செயற்படவே நாம் முனைகின்றோம்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் செயற்குழுவில் எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட முடிவுகள் பற்றி செய்திகள் வெளியாகின. அந்தச் செயற்குழுவில் உள்ள ஒன்பது பேரில் பெரும்பான்மையானவர்கள் மாவை சேனாதிராஜாவுக்கு எதிரானவர்கள்.

ஆனால், ஜனவரியில் கொழும்பில் தமிழ்க் கட்சிகள் சந்திப்பு உள்ளது என்று மாவை சொன்னதாகவும் செய்தி வந்தது. இது முரண்பாட்டை ஏற்படுத்தக் கூடும். இந்த முரண்பாடு ஏற்படுவதற்கு சிலரது சுயநல சிந்தனைகள் தான் காரணம்.

மாவை சேனாதிராஜாவை சிறையில் இருந்து விடுவித்த நீதிபதி நான் தான். ஆனால், இப்போதைய நிலையில் மாவையை எங்கள் தலைவராகக் கொண்டு விடயங்களை நகர்த்தலாம் என்று தான் சொல்கின்றேன்.

மக்களுக்காக நாங்கள் செயற்பட ஆரம்பித்தால் சுயநல சிந்தனைகளை கைவிட்டு மக்கள் சார்பில்தான் சிந்திக்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.