’கை’யை கைவிட்டோர் கைகோர்க்க வாய்ப்பு!!
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை கைவிட்டு சென்ற அனைவரும் மீண்டும் கட்சியில் இணைய சந்தர்ப்பம் இருப்பதாக அந்த கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.
இதனடிப்படையில், கட்சியின் யாப்பை மீறி, கட்சியின் கட்டுப்பாட்டுக்கு எதிராக செயல்பட்டவர்கள், அந்த தவறுகளை திருத்திக்கொண்டு, கோரிக்கை விடுத்தால், கட்சியில் மீண்டும் இணைவதில் எந்த சிக்கலோ, பிரச்சினையோ இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பல்வேறு காலங்களில் பல சிக்கல்கள், நெருக்கடிகளை எதிர்நோக்கிய கட்சி என்றும் எனினும் கட்சி எப்போது மக்களிடம் இருந்து தூர விலகவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
“ஜனநாயகத்தை மீண்டும் ஸ்தாபிக்க தேர்தல் அவசியம் என்றே நாங்கள் கூறுகிறோம். நாட்டு மக்கள் வீதிக்கு வந்து 69 லட்சம் மக்களின் வாக்குகளை பெற்ற ஜனாதிபதி விரட்டி விட்டு, மாற்றத்தை கோரினர்.
மாற்றங்களை கோரிய மக்களுக்கு தற்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை கூட தெரிவு செய்ய முடியாத கட்சி ஒன்றின் தலைவருக்கு கீழ் அனுபவித்ததை விட துன்பங்களை அனுபவிக்க நேரிட்டுள்ளது“ என்றார்.
பல காரணங்களின் அடிப்படையில் எமது கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர் எனவும் தேர்தல் நடத்தப்பட்டால், இவர்களுக்கு ஏற்படும் நிலைமையை காண முடியும் எனவும் தெரிவித்தார்.
தமது அதிகாரம் பறிப்போய்விடும் என்று அஞ்சுவோரே தேர்தல் வேண்டாம் என கூறுகின்றனர் என்று குறிப்பிட்ட அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பல துண்டுகளாக பிரிந்து தேர்தலை எதிர்கொள்ள முடியாத அச்சத்தில் பல கதைகளை கூறி தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்து வருகிறது என்றார்.