நெல்லியடி கூட்டு பாலியல் வன்புணர்வு ; 09 வருடங்களின் பின் சந்தேகநபர் கைது!
யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கூட்டு பாலியல் வன்புணர்வு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் 09 வருடங்களின் பின்னர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 07ஆம் திகதி நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முள்ளி பகுதியில் பெண்ணொருவர் கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் தப்பி சென்ற நிலையில் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக வழக்கு விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் தப்பி சென்றவருக்கு எதிராக பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
தப்பி சென்ற நபர் வெளிநாடு ஒன்றுக்கு சென்று , அங்கு சில காலம் பணிபுரிந்து விட்டு , மீண்டும் நாடு திரும்பி கொழும்பு , ஆட்டுப்பட்டி தெருவில் கடையொன்றில் பணிபுரிந்து வந்த நிலையில் , அது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.