இலங்கையில் இருந்து தப்பி தமிழகத்துக்குள் ஊடுருவிய ‘போதைப் பொருள்’ டான் இம்ரான்-உஷார்நிலையில் போலீஸ்!
இலங்கையில் இருந்து தப்பி இந்தியாவுக்குள் போதைப் பொருள் கடத்தல் மன்னன் கஞ்சிபானி இம்ரான் ஊடுருவியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து ராமேஸ்வரம் உள்ளிட்ட இலங்கை எல்லை கடற்பகுதிகளில் போலீசார் உஷார்நிலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை தளமாக கொண்டு செயல்படும் போதைப் பொருள் கடத்தல் கும்பல் ஒன்றின் தலைவர் கஞ்சிபானி இம்ரான். சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல்களில் இம்ரான் கோஷ்டியும் ஒன்று.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் போதைப் பொருட்களை அனுப்பி இலங்கை மூலமாக வெளிநாடுகளுக்கு சப்ளை செய்வதுதாம் கஞ்சிபானி இம்ரானின் ரூட். இதனால் இலங்கையில் இம்ரான் மீது ஏராளமான வழக்குகள் பாய்ந்திருந்தன. கடந்த 2019-ம் ஆண்டு துபாய் நாட்டு உதவியுடன் கஞ்சிபானி இம்ரானை தூக்கியது இலங்கை அதிரடிப்படை.
இலங்கையில் கடந்த 3 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கஞ்சிபானி இம்ரானுக்கு சில நாட்களுக்கு முன்னர் ஜாமீன் கிடைத்தது. நிபந்தனை ஜாமீனில் விடுதலையான இம்ரான், இலங்கையில் இருந்து தப்பிவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இலங்கையில் இருந்து தப்பி மன்னார் வழியாக தமிழ்நாட்டுக்குள் இம்ரான் ஊடுருவி உள்ளதாகவும் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பான தகவல்கள் ஊடகங்களில் வெளியாகின.
இதனடிப்படையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில், உலகின் மிகக்கொடிய போதைமருந்து கடத்தல் கும்பல் தலைவனான முகமது நாஜிம் முகமது இம்ரான் தமது கூட்டாளிகளுடன் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஊடுருவியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. எல்லையோர பாதுகாப்பு குறைபாடுகளையே இது காட்டுகிறது.
முகமது இம்ரான் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தப்பி வரக்கூடும் என்று தமிழக உளவுத்துறைக்கு மத்திய உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அதற்குப் பிறகும் கடலோரக் காவல்படை, தமிழகக் காவல்துறையின் பாதுகாப்பை மீறி முகமது இம்ரான் தமிழகத்தில் நுழைந்தது எப்படி?
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் ஹெராயின், கோகெய்ன் கடத்தல் கும்பல்களுடன் முகமது இம்ரானுக்கு வலிமையான பிணைப்பு உண்டு. 2019-ஆம் ஆண்டில் துபையில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட இம்ரான், அங்கு பிணையில் விடுதலையான நிலையில் தப்பியுள்ளான்.
தமிழ்நாட்டில் போதைமருந்து கலாச்சாரம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் முகமது இம்ரானின் ஊடுருவல் நிலைமையை மேலும் மோசமாக்கக்கூடும். முகமது இம்ரானை உடனடியாக கைது செய்து நாடு கடத்த வேண்டும் என கூறியுள்ளார்.
இதனிடையே இலங்கையில் இருந்து தப்பி தமிழ்நாட்டில் பதுங்கி இருக்கும் இம்ரான், கூட்டாளிகளை கொத்தாக கைது செய்ய கடலோரப் பகுதிகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களி மர்மநபர்கள் நடமாட்டம் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக, திருச்சி சிறப்பு முகாமில் போதைப் பொருட்கள் கடத்தல், ஆயுதங்கள் கடத்தல், விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்குதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 9 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.