பெண் பயிற்சியாளர் பாலியல் புகார்: அரியானா விளையாட்டு மந்திரி ராஜினாமா!!
அரியானா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு விளையாட்டு மந்திரியாக இருப்பவர் சந்தீப் சிங். முன்னாள் ஹாக்கி வீரரான இவர் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தார். ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்று உள்ளார். இந்தநிலையில் மந்திரி சந்தீப்சிங் மீது தடகள பெண் பயிற்சியாளர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார்.
ஆவணங்களை சமர்ப்பிப்பது தொடர்பாக மந்திரி சந்தீப்சிங் அவரது அலுவலகத்துக்கு வரவழைத்து தவறாக நடந்து கொண்டார் என்றும் நான் அங்கு அறையில் இருந்து தப்பித்து வெளியே ஓடி வந்ததாகவும் பெண் பயிற்சியாளர் தெரிவித்தார். இதுகுறித்து மாநில காவல்துறை தலைவர் உள்துறை அமைச்சர், முதல்-மந்திரியை சந்தித்து முயற்சித்தபோதும் சந்தீப் சிங்கின் தலையீட்டால் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை மந்திரி சந்தீப் சிங் திட்டவட்டமாக மறுத்தார். தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்று தெரிவித்தார். இந்த விவகாரம் அரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெண் பயிற்சியாளரின் புகார் தொடர்பாக விசாரிக்க சிறப்பு குழுவை நியமிக்க வேண்டும். சந்தீப் சிங்கை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று இந்திய தேசிய லோக் தளம் கட்சி வலியுறுத்தியது. இந்த நிலையில் பெண் பயிற்சியாளரின் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக மந்திரி சந்தீப்சிங் மீது சண்டிகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறை செய்தி தொடர்பாளர் கூறும் போது, பெண் பயிற்சியாளர் அளித்த புகாரின் பேரில் அரியானா மந்திரி சந்தீப் சிங் மீது 5 பிரிவுகளின் கீழ் சண்டிகரில் உள்ள செக்டார்-26 போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மந்திரி மீதான குற்றச்சாட்டையடுத்து முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் உயர்மட்ட குழு கூட்டத்தை கூட்டினார். இந்நிலையில், அமைச்சர் தனது இலாகாவை முதலமைச்சரிடம் ஒப்படைத்துள்ளார்.
மேலும் தன் மீதான குற்றச்சாட்டுகள் மீண்டும் நிராகரித்துள்ள அவர், இது தனது இமேஜைக் கெடுக்கும் முயற்சி என்று தெரிவித்தார்.
என் மீது சுமத்தப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என நம்புகிறேன் என்றும் அவர் கூறினார்.