கிம் ஜாங் உன்னுக்கு அடுத்த இடத்தில் இருந்த வடகொரிய ராணுவ அதிகாரி நீக்கம்.. ஏன் என்னாச்சு?
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு அடுத்த இடத்தில் இருந்த வடகொரிய ராணுவ அதிகாரி பாக் ஜாங் சோன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவருக்கு பதிலாக ரி யோங் கில் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகங்கள் கூறுகின்றன. இந்த நீக்கம் எதற்காக நடந்தது என்பது குறித்து தெரியவில்லை. வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன்.
இங்குள்ள ராணுவத்தை மீறி அதிபர் குறித்த தகவல்களோ அந்த நாடு எடுக்கும் முடிவுகளோ வெளியே துளி கூட கசியாது. அந்தளவுக்கு ஸ்ட்ரிக்ட்டாக இருக்கும். அதிபர் கிம் ஜாங் இரு முறை மக்கள் முன்பு தோன்றாமல் இருந்த போதெல்லாம் அவர் குறித்து பல வதந்திகள் வெளியாகின.
என்ன நடந்தது
ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பது கடுகளவும் வெளியே வரவில்லை. இதற்கு ராணுவ அதிகாரியாக பதவி வகித்த பாக் ஜாங் சோன் என்றும் சொல்லப்படுகிறது. அதிபர் கிம்முக்கு அடுத்ததாக நாட்டில் அதிகாரம் வாய்ந்த நபராக கருதப்பட்டவர் ராணுவ அதிகாரி பாக் ஜாங் சோன் ஆவார்.
ராணுவ அதிகாரி
இப்படிப்பட்ட நிலையில் திடீரென ராணுவ அதிகாரி பாக் ஜாங் சோன் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ரி யோங் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த திடீர் மாற்றத்திற்கான காரணங்கள் தெரியவில்லை. புத்தாண்டு தினத்தின் போது அதிபர் கிம் தனது தந்தை மற்றும் தாத்தாவின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட கும்சூசன் அரண்மனைக்கு சென்றார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ புகைப்படத்திலும் ராணுவ அதிகாரி பாக் ஜாங் சோன் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டம்
பியாங்கியாங்கில் புத்தாண்டு பார்ட்டிகள் களைகட்டும். இந்த பார்ட்டிகளின் போதுதான் ராணுவ அதிகாரிகளை மாற்றுவது, முக்கிய கொள்கை முடிவுகள் உள்ளிட்டவை குறித்து அறிவிக்கப்படும். இந்த பார்ட்டியில் தலை குனிந்தபடியே பாக் ஜாங் உட்கார்ந்திருக்கிறார். மற்ற நபர்கள் ராணுவ அதிகாரி விவகாரம் தொடர்பாக கைகளை உயர்த்துகிறார்கள். இதன் பின்னர் அவர் அமர்ந்திருந்த சீட் காலியாக உள்ளது. இவையெல்லாம் வடகொரிய நாட்டின் அரசு ஊடகம் ஒளிபரப்பிய காட்சிகளில் தெரியவந்தது.
பதவி உயர்வு
2015 இல் ஒரு ஸ்டார் கொண்ட கமாண்டராக இருந்த பாக் ஜாங் 2020 இல் 4 ஸ்டார்களை கொண்ட ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டார். இதற்கு காரணம் நாட்டின் குறைந்த தூரம் வரை தாக்கும் ஏவுகணை தொழில்நுட்பத்தில் பாக் அளித்த பங்களிப்பிற்காக இந்த பதவி உயர்வு அவருக்கு கிடைத்தது.
அணு ஆயுத உருவாக்கம்
பின்னர் 2020 ஆம் ஆண்டு இறுதிகளில் அவர் பொலிட்பீரோவாக உயர்ந்தார், மார்ஷல் என்ற பட்டத்தையும் பெற்றார். 2023 ஆம் ஆண்டுக்கான நாட்டின் பாதுகாப்பு வியூகமாக அமெரிக்கா, தென் கொரியாவை எதிர்கொள்ள கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் ஒரு பெரிய அணு ஆயுதத்தை உருவாக்க கிம் ஜாங் உன், பாக் ஜாங்கை மாற்றியிருக்கலாம் என தெரிகிறது.