ஒரு சில துறைகளின் ஓய்வு வயது நீடிக்கும்!!
கடந்த 2022ஆம் ஆண்டு டிசெம்பர் 31 ஆம் திகதியன்று 30 ஆயிரத்துக்கும் அதிகமான அரச ஊழியர்கள் ஓய்வு பெற்ற நிலையில், ஒரு சில விசேட துறைகளில் பணியாற்றும் அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை குறைந்தபட்சம் 65 ஆக அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அறியமுடிகிறது.
ரயில்வே திணைக்களத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஓய்வு பெற்றதன் காரணமாக 1ஆம் திகதியிலிருந்து 3ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 100க்கும் அதிகமான ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், 44 புதிய ரயில் நிலைய அதிபர்களுக்கான நியமனக்கடிதங்கள் போக்குவரத்து அமைச்சில் வைத்து செவ்வாய்க்கிழமை (03) கையளிக்கப்பட்டன.
எனினும், ஏற்கெனவே ஊழியர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள ரயில்வே திணைக்களம் திடீரென ஊழியர்கள் ஓய்வு பெற்றுச் சென்றுள்ளமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 வருடங்களாகக் குறைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் இருந்து வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்திய ஆலோசகர்களை உள்ளடக்குவதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.
176 விசேட வைத்திய ஆலோசகர்களால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை பரிசீலித்த பின்னரே ஜனவரி 25ஆம் திகதிவரை இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எது எவ்வாறாயினும், இலங்கை வரலாற்றில் அதிகளவான அரச ஊழியர்கள் வருட இறுதியுடன் ஓய்வு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சில அத்தியாவசிய துறைகள் சிக்கல்களுக்கு முகம்கொடுத்துவருவதாக தெரியவருகிறது.
இந்த விடயங்களைக் கருத்திற் கொண்டு, விசேட வைத்திய நிபுணர்கள், தாதியர்கள் மற்றும் ரயில் சாரதிகள் உள்ளிட்ட விசேட அரச ஊழியர்களின் ஓய்வூதியக் காலத்தை அதிகரிப்பதற்கு பொதுநிர்வாக அமைச்சு கவனம் செலுத்தி வருதாக தெரியவருகிறது.