நாடு திரும்ப வேண்டாம்” – ஹிஜாப் அணியாமல் செஸ் விளையாடிய ஈரான் வீராங்கனைக்கு மிரட்டல் !!
ஈரானைச் சேர்ந்த செஸ் வீராங்கனை ஹிஜாப் அணியாமல் போட்டியில் பங்கேற்றதால் தற்போது அவர் நாடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஈரானைச் சேர்ந்த இளம் செஸ் வீராங்கனையான சாரா காதிப் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் கடந்த ஆண்டு கஜகஸ்தானில் நடந்த பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஹிஜாப் அணியாமல் கலந்துகொண்டார்.
ஹிஜாப் அணியாமல் சாரா விளையாட்டில் பங்கேற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இந்த நிகழ்வு அவருக்கு பல்வேறு எதிர்வினைகளை உருவாக்கி இருக்கிறது. இதன் காரணமாக அவர் ஈரான் திரும்ப வேண்டாம் என்று அவரது உறவினர்களும், நண்பர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சாராவின் பெற்றோர்களும், உறவினர்களும் ஈரான் அதிகாரிகளால் மிரட்டப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில், மிரட்டலுக்கு அஞ்சி சாரா தற்போது ஸ்பெயினில் தஞ்சம் புகுந்து இருப்பதாக கூறப்படுகிறது.
மாஷா அமினி என்ற இளம்பெண்ணின் மரணத்தைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்தது. மூன்று மாதங்களுக்கும் மேலாக நடந்த இந்தப் போராட்டத்தில் 300-க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். 15,000 பேர் வரை கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கு ஈரான் தூக்குத் தண்டனை அறிவித்தது. ஆனால், இவற்றின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை. மேலும், போராட்டக்காரர்களில் 400 பேருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.