“இளவரசர் ஹாரி அப்பாவி ஆப்கன் மக்களை கொன்றிருக்கிறார்” – தலிபான்கள் குற்றச்சாட்டு!!
போர்ப் பயிற்சி என்ற பெயரில் ஹாரி அப்பாவி ஆப்கன் மக்களை கொன்றிருக்கிறார் என்று தலிபான்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இங்கிலாந்து இளவரசர் ஹாரி, தனது ராணுவ பயிற்சிகளை 20 ஆண்டுகளாக போர் நடந்து கொண்டிருந்த ஆப்கனில் மேற்கொண்டார். இந்த நிலையில் ராணுவ பயிற்சி தொடர்பான தனது அனுபவங்களை ஹாரி தான் எழுதியுள்ள சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். அந்த வகையில் நேர்காணல் ஒன்றில் ஆப்கன் போரின் போது முஜாகீதின் அமைப்பை சேர்ந்த 25 பேரை கொன்றதாக ஹாரி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஹாரியின் இப்பேச்சுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக தலிபான்கள் ஹாரியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதுகுறித்து தலிபான் தலைவர் அனஸ் ஹக்கானி கூறும்போது, “ ஹாரி குறிப்பிட்ட தேதியில் எங்கள் அமைப்பின் மீது நடத்தப்பட்ட கொலைகள் குறித்து நாங்கள் தேடிப் பார்த்தோம். அவர் கூறியதுபோல் அந்த நாளில் எங்கள் அமைப்பில் யாரும் இறக்கவில்லை. அப்படி என்றால் அவர் அப்பாவி பொதுமக்களைதான் கொன்றிருக்கிறார் என்று முடிவுக்கு வரலாம். ஹாரி கூறியது மேற்கத்திய நாடுகள் ஆப்கனில் செய்த போர் குற்றத்தின் சிறுபகுதி.
மிஸ்டர். ஹாரி நீங்கள் சதுரங்க போட்டியின் காய்களை வெட்டவில்லை. நீங்கள் கொன்றது மனிதர்களை.. நீங்கள் சொன்னதுதான் உண்மை; உங்கள் ராணுவ வீரர்களுக்கும், ராணுவத்திற்கும் , அரசியல் தலைவர்களுக்கும் எங்கள் அப்பாவி மக்கள் சதுரங்கக் காய்களாக இருந்தனர். ஆனாலும், அந்த விளையாட்டில் நீங்கள் தோற்றுவிட்டீர்கள்” என்று தெரிவித்துள்ளார். ஹாரி இங்கிலாந்து அரசு குடும்ப சலுகைகளை துறந்துவிட்டு மனைவியுடன் சாமான்யராக வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.