;
Athirady Tamil News

சர்வக்கட்சி மாநாட்டை தமிழ் முற்போக்கு கூட்டணி புறக்கணிக்கும்!!

0

தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு திட்டம் சம்பந்தமாக மலையக கட்சிகளுடனும் ஜனாதிபதி பேச்சு நடத்த வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் சர்வக்கட்சி மாநாட்டை தமிழ் முற்போக்கு கூட்டணி புறக்கணிக்கும்.” – என்று கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

அக்கரப்பத்தனை மற்றும் டயகம பிரதேசத்தின் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியுடைய செயற்பட்டாளர்களுக்கான விசேட கூட்டம் ஒன்று நேற்று (08.01.2023) தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தலைமையில் அக்கரப்பத்தனை லக்ஷ்மி மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் விசேட அதிதியாக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

” தமிழக அரசின் அழைப்பையேற்று, மலையக மக்கள் சார்பில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவராக நாளை (09.01.2023) சென்னை செல்கின்றேன். தமிழக வம்சாவளி தமிழர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே செல்கின்றேன். இதன்போது எமது மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்களை, துயரங்களை, கஷ்டங்களையெல்லாம் தமிழக முதல்வரிடம் எடுத்துக்கூறவுள்ளேன். மக்களுக்கான தேவைப்பாடுகள் சம்பந்தமாகவும் விளக்கமளிக்கவுள்ளேன்.

வடக்கு, கிழக்கில் வாழ்பவர்கள்தான் தமிழர்கள், அவர்களுக்கு மட்டுமே பிரச்சினை உள்ளது என்றே இதுவரை காலமும் நினைத்துக்கொண்டிருந்தனர். வடக்கு, கிழக்கு பற்றி பேசுவது தப்பில்லை. ஆனால் மலையகத்தை மறந்துவிட்டனர். இந்நிலைமை தற்போது மாறியுள்ளது. மலையக தமிழர்களும் சுயமரியாதையுள்ள ஓர் இனம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

நானும், திகாம்பரமும் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தினோம். அரசில் இணையுமாறு அழைப்பு விடுத்தார். மறுத்துவிட்டோம். பதவிகள் எல்லாம் எங்களை தேடிவரும் எனக் கூறினோம். நாட்டின் ஜனாதிபதி நீங்கள், எங்கள் மக்கள் மீது அக்கறை கொள்ள வேண்டும் எனவும் எடுத்துரைத்தோம்.

வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்துகின்றீர்கள். தேசிய இனப்பிரச்சினையானது வடக்கு, கிழக்குக்கு மட்டும் உரித்தானது அல்ல. எங்களிடமும் பேசுங்கள் என்றோம். எமது மக்களுக்கும் அரசியல், சமூக மற்றும் கலாசார அபிலாஷைகள் உள்ளன. தேவைப்பாடுகள் உள்ளன. எனவே, எங்கள் பிரச்சினை பற்றியும் கண் திறந்து பாருங்கள், காது கொடுத்து கேளுங்கள் எனவும் குறிப்பிட்டோம்.

மலையக கட்சிகளை அழைத்து ஜனாதிபதி பேச்சு நடத்தாவிட்டால், சர்வக்கட்சி கூட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி பங்கேற்காது. எங்களை மதித்தால்தான் நாமும் மதிப்போம்.

உள்ளாட்சிமன்ற தேர்தல் வந்தால் போட்டியிடுவோம். நாம் தேர்தலுக்கு தயார்.” – என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.