;
Athirady Tamil News

சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு- திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம் !!

0

தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, திராவிட மாடல், அமைதிப்பூங்கா உள்ளிட்ட சில வார்த்தைகளை பேசாமல் தவிர்த்தார். பின்னர் சபாநாயகர் அப்பாவு வாசித்த தமிழாக்கத்தில் அந்த வார்த்தைகள் இடம்பெற்றன. தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் வாசிக்காதது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. ஆளுநருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநருக்கு எதிராக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ஆளுநருக்கு எதிராக டுவிட்டரில் #GetOutRavi என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்நிலையில், ஆளுநர் அவையில் இருந்து வெளியேறியது தொடர்பாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அதில் கூறப்பட்டுள்ளதாவது:- இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரின் முதல் நாளில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் விளிம்புநிலை கூறுகளாக செயல்பட்டன. அற்ப அரசியல் லாபங்களுக்காக, ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் உரையை இடையூறு செய்ததன் மூலம் சபைக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது திமுக அரசு. ஆளுநர் உரையைத் தொடங்குவதற்கு முன்பே, திமுக கூட்டணிக் கட்சிகள் போராடத் தயாராகிவிட்டனர்.

சூழல் உண்மைக்குப் புறம்பாக இருக்கும்போது, தயாரிக்கப்பட்ட உரையை வாசிக்கும்படி ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது. ஆளுநர் கருத்துக்களை, சட்டசபை குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளதா? ஆளுநர் உரையை சட்டசபை குறிப்பில், எப்படி இடம்பெற வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியது தவறானது. கண்ணியத்துக்கு மாறாக முதல்வரே நடந்து கொண்டதால், ஆளுநர் அவையில் இருந்து வெளியேற நேரிட்டது.

ஆளும் கட்சியால் எதிர்க்க முடியாததால் கூட்டணி கட்சியை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்துள்ளது திமுக அரசு. திமுகவின் பொதுக்கூட்ட உரைகளை சட்டமன்றத்தில் ஆளுநர் படிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமா ? மக்கள் பணத்தை கோடி கணக்கில் செலவு செய்து நடத்தப்படும் சட்டசபையில், நடப்பது எல்லாமே நாடகமே. இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.