கன்னடத்தில் வெளியான காந்தாரா திரைப்படம் ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரை!!
கன்னடத்தில் வெளியான காந்தாரா திரைப்படம் ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதுப் பட்டியலில் காந்தாரா படம் பரிந்துறைக்கப்பட்டுள்ளது. ஹோம்பேல் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் போட்டியில் இரண்டு பிரிவுகளில் இடம்பெற தகுதி பெற்றுள்ளது.
பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 301 திரைப்படங்களில் ‘காந்தாரா’ திரைப்படமும் இணைந்துள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா’ திரைப்படம் கன்னடத்தில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படம் வெளியிடப்பட்டது.
ரூ.16 கோடியில் உருவாக்கப்பட்ட இப்படம் உலகம் முழுக்க ரூ.400 கோடி வரை வசூலித்தது. இதனிடையே, காந்தாரா திரைப்படம் 2023ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் காந்தாரா திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் போட்டியில் இரண்டு பிரிவுகளில் இடம்பெற தகுதி பெற்றுள்ளதாக ஹோம்பேல் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஹோம்பேல் புரொடக்ஷன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் போட்டியில் காந்தாரா இரண்டு பிரிவிகளில் போட்டியிட தகுதி பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களை ஆதரித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி மற்றும் இந்த பயணத்தை உங்கள் ஆதரவுடன் தொடர எதிர்நோக்கியுள்ளோம். அந்தப் பாதையில் பளிச்சிடுவதை காண காத்திருக்கிறோம்’ என்று பதிவிட்டுள்ளது.