எட்டிப்பிடிக்க முடியாத ஏற்றத்தில் செல்லும் தங்கம்… !!
என் தங்கம்..பொன்னு… செல்லம்… இப்படி குழந்தைகளை கொஞ்சுவதில் இருந்தே தங்கம் நம் மனதில் ஆழமான இடத்தில் பதிந்துள்ளது என்பதை அறியலாம். ஒரு காலத்தில் மிக குறைவான விலையில் இருந்த தங்கம் இன்று விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துகொண்டே செல்கிறது. ஆனாலும் அதை வாங்குவோர் சளைக்கவில்லை. திருமணம், காதுகுத்து, பிறந்தநாள் என எந்த விழா என்றாலும் தங்கம் இல்லாத விழாவா…கடுகளவு வாங்கி கொடுத்தாலும் கவனத்தை ஈர்க்கும் பரிசு தங்கம்தான்… ஒரு குண்டுமணி தங்கம்கூட இல்லாமல் தமிழர்களின் இல்லங்களில் சுப துக்க காரியங்கள் நடப்பது இல்லை. அதே நேரத்தில் சாமானியர்கள், பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் என எல்லோராலும் தங்கம் ஒரு லாபகரமான, பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. நிதி நெருக்கடியானால் தங்கத்தை அடகு வைத்து அல்லது விற்று உடனடியாக பணமாக்கி கொள்ள முடியும். மக்களின் வாழ்வியலோடு இணைந்துவிட்ட தங்கம் சமீப காலமாக தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
2023ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடைந்து தங்கம் வாங்குபவர்களுக்கு அதிர்ச்சி அளித்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து தங்கத்துக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியது. அதைத் தொடர்ந்து தங்க விலையும் அதிரடியாக உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 2022-ம் ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31-ந் தேதி சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு 41 ஆயிரத்து தாண்டியது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது. நேற்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 5,221 ஆகவும், சவரனுக்கு ரூபாய் 41,768 ஆகவும் இருந்தது.
24 காரட் சுத்த தங்கம் கிராமுக்கு ரூபாய் 5,482 ஆகவும், சவரனுக்கு ரூபாய் 43,856 ஆகவும் இருந்தது. இன்றும் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று (செவ்வாய்க்கிழமை) கிராமுக்கு ரூபாய் 5,260 ஆகவும், சவரனுக்கு ரூபாய் 42,080 ஆகவும் உயர்ந்து உள்ளது. 24 காரட் சுத்த தங்கம் கிராமுக்கு ரூபாய் 5,523 ஆகவும், சவரனுக்கு ரூபாய் 44,184 ஆகவும் இருந்தது. இந்த உயர்வு நடுத்தர வர்க்கத்தினர், முதலீட்டாளர்கள், நகைப்பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் இனி தங்கம் வாங்கவே முடியாதோ என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தின் விலை ஏறினாலும் இறங்கினாலும் அதற்கான மவுசே தனிதான். இதனை ஒரு பெரும் சேமிப்பாக நடுத்தர வர்க்கத்தினர், இல்லத்தரசிகள், முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.
தங்கத்தின் ஆபரண நகை வாங்க வேண்டும் என நினைப்பவர்களின் கனவு நிறைவேறுமா என்பதே தெரிவில்லை. தங்கத்தை அதிக அளவு நுகர்வு செய்யும் இந்தியாவில் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பலரையும் கவலைக்கு உள்ளாக்கி உள்ளது. இல்லத்தரசிகள் தொடங்கி முதலீட்டாளர்கள் வரை தங்கத்தில் அதிக முதலீடு செய்துவருவதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். எங்கெங்கோ வீடு, மனை, ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்பவர்களும் தங்கத்தில் ஒரு பகுதியை முதலீடு செய்துள்ளனர். இது விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.
பொங்கலுக்கு பிறகு திருமண முகூர்த்த நாட்கள் அதிகம் இருக்கும். திருமணத்துக்கு புதிதாக தங்கம் வாங்குபவர்களுக்கு, தங்கத்தின் விலை உயர்வினால் செலவு பல மடங்கு அதிகரிக்கும். விலை உயர்வால் நடுத்தர மக்கள் இனி நம்மால் தங்கத்தை வாங்கவே முடியாதோ, கண்ணால தான் பார்க்கணும் என புலம்புவதை கேட்க முடிகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தை பொறுத்து நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.