பாகிஸ்தானில் கோதுமை விலை கிடுகிடு உயர்வு: கிலோ ரூ.160க்கு விற்பதால் மக்கள் கவலை..!!
பாகிஸ்தானில் முக்கிய உணவான கோதுமை கிலோ 160 ரூபாய்க்கு விற்கப்படுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பாகிஸ்தானில் கோதுமை மாவின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பேக்கரி கடைகளில் பொருட்களின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. இஸ்லாமாபாத் மற்றும் ராகுல்பெண்டியில் பிரதான நாணின் விலை 30 ரூபாயாகவும், ரொட்டியின் விலை 25 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக உள்ளூர் கடைக்காரர்கள் உறுதி செய்துள்ளனர். பாகிஸ்தானில் கோதுமை தட்டுபாடு அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டிற்கு உதவும் நோக்கில் 3 லட்சம் டன் கோதுமையை ரஷ்யா அளித்துள்ளது.
ரஷ்யாவின் 2 கப்பல்கள் மூலமாக இந்த கோதுமை நேற்று கராச்சி துறைமுகம் வந்து சேர்ந்தது. வரும் மார்ச் 30ம் தேதிக்குள் மேலும் 4 லட்சம் டன் கோதுமையை அளிக்க ரஷ்யா முன்வந்துள்ளது. கடந்த ஆண்டு போதுமான கோதுமையை பாகிஸ்தான் அரசு இருப்பு வைத்து கொள்ளாமல் இருந்தது தான் தற்போது பாகிஸ்தானில் கோதுமை தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக அந்நாட்டு மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதே சமயம் பாகிஸ்தானில் இரவு நேரங்களில் கடும் மின் தட்டுப்பாடு நிலவி வருவதும் குறிப்பிடத்தக்கது.