நெருப்புடன் விளையாட வேண்டாம்- தைவானை ஆதரிக்கும் நாடுகளுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை!!
தைவானை, சீனா தனது நாட்டின் ஒரு பகுதி என்று சொந்தம் கொண்டாடி வருகிறது. இவ்விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தைவானுடன் இணைந்து அமெரிக்கா போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டு அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, தைவானுக்கு சென்றார். அதேபோல் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தற்போது தைவான் சென்றுள்ளது.
இது சீனாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் தைவானை ஆதரிக்கும் நாடுகளுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சீனாவின் தைவான் விவகார அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “தைவான் விவகாரத்தில் தேசிய இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் இப்போதும் சீனா உறுதியாக உள்ளது.
சீனாவுக்கு தீங்கிழைக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் சில நாடுகள் தைவானுக்கு ஆதரவாக செயல்படுகின்றன. அந்த நாடுகள் நெருப்புடன் விளையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.