பொங்கல் பண்டிகைக்கு மளிகை பொருட்கள் தருவதாக கூறி ரூ.8 கோடி மோசடி- 6 பேர் கைது !!
ஆந்திர மாநிலம் விஜய நகரத்தை சேர்ந்தவர் மஜ்ஜி அப்பல ராஜு. இவர் அப்பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை வைத்துள்ளார். இவரது நண்பர்களான ரமேஷ், பதிவாடா ஸ்ரீலேகா ஆகியோரிடம் சேர்ந்து பொங்கல் பண்டிகைக்கு மளிகை பொருட்கள் தருவதாகவும், மாதம் ரூ.300 வீதம் 12 மாதங்களுக்கு ரூ.3600 கட்டினால் ரூ.5,000 மதிப்பிலான மளிகை பொருட்கள் தருவதாக விளம்பரபடுத்தினர். கடந்த ஆண்டு பணம் கட்டியவர்களுக்கு கூறியபடி மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த தகவல் மாவட்டம் முழுவதும் பரவியது. சிறுக சிறுக பணம் கட்டினால் மொத்தமாக மளிகைப் பொருட்கள் கிடைப்பதால் பொதுமக்கள் போட்டி போட்டு பணத்தை கட்டினார். இதற்காக அந்தந்த பகுதியில் ஏஜெண்டுகள் நியமிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதிலும் இருந்து 24 ஆயிரம் பேர் ரூ.8.09 கோடி பணம் கட்டி இருந்தனர். பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பணம் கட்டியவர்களுக்கு இதுவரை மளிகை பொருட்கள் வழங்கப்படவில்லை.
பணம் கட்டிய அலுவலகத்திற்கு சென்று பார்த்தபோது அலுவலகங்கள் மூடப்பட்டு இருந்தன. பணம் கட்டிய ஏஜெண்டுகளுக்கு போன் செய்தபோது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் பணம் கட்டி ஏமாந்த பொதுமக்கள் இதுகுறித்து அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார் செய்தனர். அனைத்து வழக்குகளும் மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு தீபிகா பட்டேல் தலைமையிலான போலீசார் பண மோசடியில் ஈடுபட்ட அப்பல ராஜு, ரமேஷ், பதிவாடா ஸ்ரீலேகா உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.
விசாரணையில் புதியதாக குடிநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்க ரூ 3.50 கோடி முதலீடு செய்யப்பட்டதால் பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்தபடி மளிகை பொருட்கள் வழங்க முடியாமல் தெரிவித்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட 6 பேரிடம் இருந்து பணம், தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பொங்கல் பண்டிகைக்கு மளிகை பொருட்கள் தருவதாக கூறி 24 ஆயிரம் பேரிடம் மோசடி செய்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.