கூகுள் நிறுவனத்திற்கு ரூ.936 கோடி அபராதம்… தடை விதிக்க மேல்முறையீட்டு தீர்ப்பாயம் மறுப்பு!!
கூகுள் நிறுவனத்திற்கு இந்திய போட்டி ஆணையம் விதித்த அபராத தொகை உத்தரவுக்கு தடை விதிக்க தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் மறுத்துவிட்டது. பிளே ஸ்டோரில் ஆதிக்கம் செலுத்தியதாக கூகுள் நிறுவனத்திற்கு போட்டி ஆணையம் 936 கோடியே 44 லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருந்தது. இந்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், அபராத தொகையில் 10 சதவீதத்தை பதிவாளரிடம் 4 வாரங்களில் செலுத்த வேண்டும் எனவும், இறுதி விசாரணையை ஏப்ரல் 17ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் உத்தரவிட்டனர்.
இதேபோல் கடந்த வாரம், தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் மற்றொரு அபராத உத்தரவை நிறுத்தி வைக்க மறுத்துவிட்டது. அதில் ஆண்ட்ராய்டு மொபைல் சாதனங்கள் தொடர்பான போட்டி எதிர்ப்பு நடைமுறைகளுக்காக கூகுளுக்கு ரூ.1,337.76 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.