ஸ்ரீகாளஹஸ்தி அருகே 7 அடி உயரத்தில் சிவன் சிலை அமைக்கும் பணி !!
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்த கைலாசகிரி மலைக்கு கிரிவலம் செல்லும் பாதையில் அஞ்சூர் மண்டபம் அருகில் ராமாபுரம் நீர்த்தேக்கம் உள்ளது. அதில் கரையோரம் தாமரைப்பூக்கள் பூத்துக்குலுங்கும். அது, பக்தர்களை கவரும் வகையில் இருக்கும். இந்தநிலையில் ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்த எம்.எம். வாடா பகுதியைச் சேர்ந்த பக்தர் மாத்தையா என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது தந்தையின் நினைவாக அஞ்சூரு மண்டபத்தைச் சீர்படுத்தி, அங்கு அரசு அனுமதியோடு ராமாபுரம் நீர்த்தேக்கத்தில் சிவன், பார்வதி சிலைகளை நிறுவினார்.
அதில் சிவன் சிலை 7 அடி உயரமும், 15 அடி அகலமும் கொண்டதாகும். சிலைகளை நிறுவும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து பக்தர் மாத்தையா கூறியதாவது:- சிவபெருமான் சிலை அமைக்கும் பணி கலை நயத்துடன் நடந்து வருகிறது. சிவன் தலையில் இருந்து கங்கைநீர் அருவியாய் விழுவதுபோல் செயற்கை நீரூற்று அமைக்கப்படும். ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் இந்த நீர்த்தேக்கத்துக்கு வந்து சிவன் சிலையை தரிசிக்கலாம்.
சிவன் சிலை பக்தர்களை கவரும் வகையில் நுட்பமாக அமைக்கப்படும். சிவன் சிலையைச் சுற்றிலும் கண்களை கவரும் வகையில் மின் விளக்குகள் அமைக்கப்படும். இசை நீரூற்று ஏற்பாடு செய்யப்படும். தன்னால் இயன்ற சேவையை சிவபெருமானுக்கு செய்கிறேன். கைலாசகிரி மலைக்கு பக்தர்கள் கிரிவலம் செல்லும் பாதையை, தமிழகத்தில் திருவண்ணாமலையில் இருப்பதுபோல் சீரமைக்கப்படும். ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் ஒத்துழைப்போடு சிவபெருமான் சிலையை அமைத்து வருகிறேன்.
வரும் காலத்தில் தனக்கு அரசு அனுமதி அளித்தால் ராமாபுரம் நீர்த்தேக்கத்தில் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் படகு சவாரி செய்ய படகு குளம் அமைக்க ஏற்பாடு செய்வேன். நீர்த்தேக்கம் அருகில் பூங்காவை அமைப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.