;
Athirady Tamil News

2030-ம் ஆண்டுக்குள் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் 3-வது இடத்தை எட்டும்- மத்திய மந்திரி ஜெய்சங்கர் உறுதி !!!

0

‘துக்ளக்’ இதழின் 53-வது ஆண்டு நிறைவு விழா, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு ‘துக்ளக்’ ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்றார். விழாவில் அவர், மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ எழுதிய ‘நினைத்து பார்க்கிறேன்’ என்ற நூலின் தொகுப்பை வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:- இந்தியாவில் இருந்து 3.2 கோடி மக்கள் வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகிறார்கள். மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் வெளிநாடுகளில் இந்திய மக்களே அதிகளவில் பணிபுரிந்து வருகிறார்கள். அப்படி வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு முனைப்பாக செயல்படுகிறது.

உதாரணத்துக்கு ‘உக்ரைன்’ மீதான ரஷியா போரில் அங்கு வாழும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் உலக நாடுகளுக்கே எடுத்துக்காட்டாக அமைந்தன. உலக அளவில் பொருளாதாரத்தில் இந்தியா 5-வது மிகப்பெரிய நாடாக இருக்கிறது. 2030-ம் ஆண்டுக்குள் இந்தியா 3-வது இடத்துக்கு நிச்சயம் முன்னேறும். அந்த அளவு பொருளாதாரத்தில் இந்தியாவின் தாக்கம் மிகுதியாக எதிரொலித்து வருகிறது. கடந்த 8 ஆண்டுகளில் தேசிய அளவில் பல முக்கிய முடிவுகளை தைரியமாக மத்திய பா.ஜ.க. அரசு எடுத்திருக்கிறது.

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் எந்தவித சமரசத்துக்கும் மத்திய அரசு சென்றதில்லை. பயங்கரவாதத்தை ஒருபோதும் இந்தியா அனுமதிக்காது. இன்று உலகத்திலேயே இந்தியா மிகவும் பொறுப்பான நாடாக விளக்குகிறது. இந்திய பெருங்கடல் எல்லையில் வலிமையான, மிக முக்கியமான நாடாக திகழ்கிறது. இந்தியாவின் வெளியுறவு கொள்கையை எல்லா நாடுகளும் பெருமையுடன் பார்க்கின்றன. மற்ற நாடுகளைவிட நமது வேகம் அதிகமாக இருக்கிறது.

உலக நாடுகளில் பறந்து விரிந்த நிலப்பரப்பு கொண்ட, வரலாற்றுச் சிறப்புமிக்க நாடு இந்தியா. ஒரு காலத்தில் வணிக தளமாக பார்க்கப்பட்ட இந்தியா, இன்று முன்னணி நாடாக திகழ்ந்த உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்தியாவின் வெற்றியோ, தோல்வியோ எதுவாக இருந்தாலும் அது உலக நாடுகளில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உறுதியாக சொல்கிறேன். ‘பெண்குழந்தைகளை வளர்ப்போம் பாதுகாப்போம்’ போன்ற மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் நலத்திட்டங்கள், உலக அளவில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி இருக்கின்றன. ஒருகாலத்தில் பேரிடர் காலங்களில் உலக நாடுகளின் உதவியை இந்தியா எதிர்நோக்கி இருந்தது.

கொரோனா காலகட்டத்தில் உலக நாடுகளுக்கு தடுப்பூசியை உற்பத்தி செய்து வழங்கும் மிகப்பெரிய வல்லமைக்கு இந்தியா முன்னேறி இருக்கிறது. 100 உலக நாடுகளுடன் கூட்டணி வைத்து, 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசியை வழங்கி உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்தது. வளரும் நாடுகளில் இந்தியா மிக முக்கியமான இடத்தை பெற்று இருக்கிறது. உலக நாடுகளுடன் நட்புறவிலும் இந்தியா சிறந்த நாடாக விளங்குகிறது. இதனாலேயே உலக நாடுகளுக்கு மிகவும் முக்கிய தேவையான நாடாக இந்தியா தற்போது மாறி இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக ‘துக்ளக்’ வாசகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அதன் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி பதிலளித்தார்.

விழாவில் தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் கரு.நாகராஜன், எம்.என்.ராஜா, மூத்த தலைவர் எச்.ராஜா, பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், முன்னாள் எம்.பி. டாக்டர் மைத்ரேயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.