உலகளவில் இந்தியாவுக்கு செல்வாக்கு மோடியை பாராட்டும் பாக். ஊடகம்!!!
உலகளவில் இந்தியாவுக்கு செல்வாக்கு உயர்ந்துள்ளதாகவும், மோடியால் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அந்நாட்டின் பிரபல முன்னணி பத்திரிகையான ‘எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூனில்’ அரசியல், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர் ஷாஜத் சவுத்ரி என்பவர் எழுதியுள்ள கட்டுரையில், ‘இந்திய பிரதமர் மோடியின் தலைமையால், அந்நாடு உலக அரங்கில் வளர்ச்சியடைந்து வருகிறது.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சிறப்பாக உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி 3 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. உலக முதலீட்டாளர்களின் விருப்பமான தேர்வாக இந்தியா மாறியுள்ளது. விவசாயப் பொருட்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதற்கு முன்பிருந்த ஆட்சியாளர்களுடன் ஒப்பிடும் போது, தான் எதை சாதிக்க வேண்டும் என்று நினைத்தாரோ அதனை மோடி சாதித்து வருகிறார்.
இந்தியா தனது செல்வாக்கை உலகளவில் உயர்த்தி வருகிறது’ என்று கூறியுள்ளார். ஏற்கனவே கடந்த நவம்பரில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்து பாராட்டி பேசினார். அதேபோல் கடந்தாண்டு அக்டோபரிலும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை இம்ரான் கான் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.