இலங்கை ராணுவத்தை பாதியாகக் குறைக்க முடிவு – அரசின் இந்த முடிவுக்கு என்ன காரணம்?
ராணுவத்தின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானத்தை எட்டியுள்ளதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இலங்கை ராணுவத்தில் தற்போது 200,783 பேர் கடமையாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், 2024ஆம் ஆண்டின்போது, ராணுவத்தின் முழு எண்ணிக்கையை 135,000 வரை குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், 2030ஆம் ஆண்டாகும்போது, ராணுவத்தின் முழுத் எண்ணிக்கையை 100,000 வரை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இலங்கையின் தேசிய பாதுகாப்பு நலன்களுக்கு ஏற்ப எந்தவொரு பாதுகாப்பு சவாலையும் எதிர்கொள்ளும் வகையில், 2030ஆம் ஆண்டளவில் மூலோபாய மற்றும் தொழில்நுட்ப ரீதியில் தகுதி வாய்ந்த சமச்சீர் ராணுவத்தை உருவாக்குவதே இலங்கை ஆயுதப்படைகளின் மூலோபாயத் திட்டத்தின் ஒட்டுமொத்த நோக்கம்.
ராணுவ வீரர்களைக் குறைப்பதற்கான காரணம் என்ன?
இலங்கையில் யுத்தம் நிறைவடைந்துள்ள காரணத்தால், ராணுவத்தை சாதாரண எண்ணிக்கைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டதாக ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
நாட்டின் நிலைமைக்கு ஏற்ப ராணுவத்தின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் குறைப்பதற்கும் அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
இலங்கை ராணுவத்தின் எண்ணிக்கையானது, நாட்டின் நிலவரத்தைக் கருத்தில் கொண்டே தீர்மானிப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இதுவே உலக நாடுகளின் நியதி என்றும் அவர் தெரிவிக்கின்றார்.
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரான காலத்தில் இலங்கை ராணுவத்தினால், பல்வேறு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
லட்சக்கணக்கில் குறைவடையும் இலங்கை ராணுவம் – காரணம் என்ன?
அதேபோன்று, இயற்கை அனர்த்த நிலைமைகளின் போது, ராணுவத்தின் பங்களிப்பு அதிகளவில் காணப்பட்டது.
மேலும், நாடு கோவிட் வைரஸ் தாக்கத்தை எதிர்கொண்ட தருணத்தில், அதைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளில் ராணுவத்தினர் பாரிய பங்களிப்புக்களைச் செய்திருந்தனர்.
தனிமைப்படுத்தல் நிலையங்களை நடத்துவது, கோவிட் தொற்றாளர்களை அழைத்துச் செல்லுதல், கோவிட் தடுப்பூசிகளைச் செலுத்துதல் உள்ளிட்ட பாரிய பணிகளில் ராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர்.
இவ்வாறான நிலையில், இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுகளைச் சந்தித்துள்ள தருணத்தில், ராணுவத்திற்கு அதிகளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகப் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்டிருந்தன.
இவ்வாறான சூழ்நிலையில், நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு ராணுவத்தின் எண்ணிக்கையைக் குறைக்க தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோனை மேற்கோள்காட்டி, பாதுகாப்பு அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது.