ஜனாதிபதியின் கூட்டத்தில் கதிரைச் சண்டை போட்ட பிரமுகர்கள்!!
வடக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநரும், முன்னாள் ஆளுநரும் கதிரைச் சண்டையில் ஈடுபட்டமை அரசாங்க உயரதிகாரிகளை முகஞ்சுழிக்க வைத்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் ஜனவரி 15 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற தேசிய பொங்கல் விழாவுக்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க, வடக்கு மாகாணத்தில் படையினரால் அடாத்தாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ள நிலங்களை விடுவிப்பது தொடர்பாக ஆராய்வதற்கென மாவட்ட செயலகத்தில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நல்லூரில் பொங்கல் விழாவை முடித்துக் கொண்டு கச்சேரிக்குச் சென்ற ஜனாதிபதியின் பரிவாரங்களோடு, தற்போதைய கல்வி இராஜங்க அமைச்சரும், முன்னாள் ஆளுநருமான சுரேன் ராகவன் வந்திருந்தார்.
ஜனாதிபதிக்கு அருகில் அவருக்கென ஆசனம் போடப்பட்டு, அவரது பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் அந்த இடத்துக்கு வருவதற்கு முன்னரே அங்கு வந்திருந்த தற்போதைய ஆளுநர் ஜீவன் தியாகராஜா, கல்வி இராஜாங்க அமைச்சரின் பெயர் ஒட்டப்பட்டிருந்த கதிரையில் அமர்ந்து விட்டார்.
ஜனாதிபதியுடன் வந்து தனது இருக்கையைத் தேடிய கல்வி இராஜங்க அமைச்சருக்கு அவரது கதிரையை விட்டுக் கொடுக்காமல், தற்போதைய ஆளநர் முரண்பட்டுக் கொண்டமையை அங்கிருந்த அதிகாரிகள் கவனிக்கத் தவறவில்லை.
இச் சம்பத்தை நேரில் கண்ட கொழும்பைச் சேர்ந்த அதிகாரிகளும், யாழ்ப்பாணத்து அதிகாரிகளும் ஒருவரையொருவர் பார்த்து முகஞ்சுழித்துக் கொண்டனர்.