கூட்டுப் பயிற்சியை ஆரம்பிக்கும் இலங்கை மற்றும் அமெரிக்க இராணுவத்தினர்!!
அமெரிக்க கடற்படை மற்றும் Marine Corps என்பன இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப் படை என்பவற்றுடன் இணைந்து Cooperation Afloat Readiness and Training (CARAT)/Marine Exercise (MAREX) Sri Lanka 2023 எனும் கூட்டுப் பயிற்சி நடவடிக்கையினை (ஜன. 19 – 26, 2023) கொழும்பில் ஆரம்பிக்கவுள்ளன.
CARAT/MAREX Sri Lanka என்பது பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல், கடல்சார் பங்காண்மைகளைப் பேணி வலுப்படுத்துதல் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் இணைந்து செயற்படும் திறன்களை அதிகரித்தல் ஆகிய நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்டடுள்ள இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்புப் பயிற்சியாகும்.
இது அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஐந்தாவது CARAT/ MAREX பயிற்சியாக அமைவதுடன், இந்த வருடம் ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படை மற்றும் மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படை ஆகியவற்றின் பங்கேற்பாளர்களையும் இப்பயிற்சி உள்ளடக்கியுள்ளது.
பயிற்சிப் பரிமாற்றங்கள் கொழும்பிலும் மற்றும், திருகோணமலை மற்றும் முள்ளிக்குளம் ஆகிய இடங்களிலுள்ள இலங்கை கடற்படைத் தளங்களிலும் நடைபெறும்.
இடம்பெறவிருக்கும் இப்பயிற்சி நடவடிக்கை குறித்து அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் கருத்துத் தெரிவிக்கையில் “இலங்கையுடனான எமது இருதரப்பு உறவுகளின் 75ஆவது வருடத்தில், இப்பயிற்சிக்காக இலங்கைக் கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையுடன் இணைந்து பணியாற்றுவதில் அமெரிக்கா பெருமையடைகிறது.
இந்த வருடாந்த பயிற்சிகள், அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்குத் தயார்படுத்துவதற்கும், சுதந்திர மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பகுதியை பராமரிப்பதற்கும் ஒரு முக்கியமான வாய்ப்பாகும். பயிற்சியை ஒன்றாக இணைந்து நடாத்துவதற்கு அழைப்பு விடுத்தமைக்கு நாங்கள் நன்றியறிதலுடன் உள்ளோம்,”எனக்கூறினார்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற கடல்சார் பாதுகாப்புச் சவால்களுக்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்காவும் பங்காளர் கடற்படைகளும் இணைந்து செயற்படுவதற்கான அவற்றின் திறன்களை மேம்படுத்தும் வகையிலும் விளையாட்டு, கலாச்சாரம் மற்றும் தகவல் பரிமாற்றங்கள் ஊடாக உறவுகளை கட்டியெழுப்பும் வகையிலும் இந்த ஒரு வார கால பயிற்சியானது வடிவமைக்கப்பட்டுள்ளது.
மனிதாபிமான அனர்த்த நிவாரணம் மற்றும் உயிர்காக்கும் நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சிகளுக்கு மேலதிகமாக, அமெரிக்க மற்றும் இலங்கை வீரர்கள் தூதுவர் சங்குடன் இணைந்து பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஒரு வட்டமேசை மாநாட்டிலும் கலந்துகொள்வர்.
இப்பயிற்சியின் போது, 7ஆவது கப்பற்படையின் வாத்தியக்குழுவானது இலங்கை கடற்படை வாத்தியக்குழுவின் பங்கேற்புடன் கொழும்பில் தொடர்ச்சியான இலவச இசை நிகழ்ச்சிகளை வழங்கும்.