தேர்தல் ஆணைக்குழுவின் கலந்துரையாடலில் கலந்து கொள்ளாத பாதுகாப்புச் செயலாளர்!!
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்னவுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்த போதிலும் , அவர் ஆணைக்குழுவிற்கு பிரசன்னமாகியிருக்கவில்லை.
கடந்த புதன்கிழமை ஆணைக்குழுவிற்கு வருகை தருமாறு பாதுகாப்பு செயலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பொலிஸ்மா அதிபரை அழைத்து கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டதால் , பாதுகாப்பு செயலாளர் இதில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு இவ்வாறு செயலாளர்களை அழைத்து கலந்துரையாடுவதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இல்லை என்று அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சரொருவர் தெரிவித்தார்.
பொலிஸ்மா அதிபர் ஆணைக்குழுவிற்குச் சென்று உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடியுள்ளமையால் பாதுகாப்பு செயலாளர் அதில் பங்குபற்றவில்லை என்று தெரியவருகிறது.
தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் அறிவிப்பதற்கு முன்னர் உரித தரப்பினருடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருக்க வேண்டும்.
எனினும் தேர்தலுக்கான அறிவித்தலை விடுத்த பின்னர் இவ்வாறு கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளமையே இந்த நெருக்கடிக்கான காரணம் என்று உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்புக்கு உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை நிலவுவதாக பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே தெரிவித்திருந்ததுடன், எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தம்மிடம் பணம் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதோடு , ஆணைக்குழுவின் பிளவு தெளிவாக தென்படுவதாகவும் அதன் உறுப்பினரொருவர் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமையுடனும் , வேட்புமனு தாக்கல் நேற்றுடனும் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.