வடமதுரையில் கைதான 3 ரவுடிகள் தேனி சிறையில் அடைப்பு- விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம் !!
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையில் தென்னம்பட்டி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். வெல்லமடை பிரிவு அருகே சந்தேகத்திற்கிடமாக சிலர் நின்று கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை நோக்கி சென்றபோது சிலர் தப்பி ஓட முயன்றனர். இதனால் மேலும் சந்தேகம் அடைந்து போலீசார் அவர்களை விரட்டி சென்று 3 பேரை சுற்றி வளைத்தனர். விசாரணையில் நெல்லை சுத்தமல்லியை சேர்ந்த பிரபல ரவுடி சுந்தர் (வயது31), வடமதுரை அருகே உள்ள பிலாத்து கிராமத்தை சேர்ந்த ரமேஷ்குமார் (34) மற்றும் நல்லாண்டவர் (29) என தெரிய வந்தது.
இவர்கள் வடமதுரை, அய்யலூர் பகுதிகளில் கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டியதாக போலீசாரிடம் தெரிவித்தனர். ஆனால் போலீசார் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. நெல்லை சுந்தர் மீது 10க்கும் மேற்பட்ட கொலை, திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளன. இவரை போலீசார் தேடி வந்த நிலையில் இங்கு தனது கூட்டாளிகளுடன் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இதேபோல் பிலாத்து பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் தன்னை பத்திரிகையில் பணிபுரிவதாக கூறிக்கொண்டு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்துள்ளனர். தப்பி ஓடிய 4 பேர் யார்? என்பது குறித்தும், அவர்கள் எங்கு பதுங்கி உள்ளனர் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பிடிபட்ட 3 ரவுடிகளிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்து இவர்கள் தொடர்பில் உள்ள ரவுடிகள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு திண்டுக்கல் சிறையில் எதிரிகள் இருக்கலாம் என்பதால் அவர்கள் தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த கும்பல் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.