பவித்திராவின் தீர்மானத்தை இரத்து செய்து ரிட் பிறப்பிப்பு!!
இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பதவியில் இருந்து பேராசிரியர் ஹரேந்திர டி சில்வாவையும் நான்கு பேரை சபையின் உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து நீக்கவும் முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்து, நெறிமுறை உறுத்தும் நீதிப்பேராணையை (ரிட்) மேன்முறையீட்டு நீதிமன்றம், வியாழக்கிழமை (26) பிறப்பித்தது.
ஹரேந்திர டி சில்வா மற்றும் மருத்துவ சபையின் உறுப்பினர்களான டொக்டர் சுனில் ரத்னப்பிரிய, டொக்டர் உபுல் குணசேகர, பேராசிரியர் நாரத வர்ணசூரிய மற்றும் டொக்டர் புஷ்பிகா உபேசிறி ஆகியோர் ரிட் மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.
2020 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி இலங்கை மருத்துவ சபையில் இருந்து தங்களை நீக்கியதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனுவில் முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்திரா, சட்டமா அதிபர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.
இந்த மனு மீதான உத்தரவு முகமது லாஃபர் மற்றும் எஸ்.யு.பி. கரல்லியத்தே ஆகியோரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாமினால் பிறப்பிக்கப்பட்டது.
அதன்போது, முன்னாள் அமைச்சரினால் இலங்கை மருத்துவ சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட வஜிர திஸாநாயக்க அந்தப் பதவியில் செயற்படுவதை தடுத்து இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும் மேற்குறிப்பிடப்பட்ட 4 சபை உறுப்பினர்களின் வெற்றிடங்களுக்கு நியமிக்கப்பட்ட பிரதியீட்டு உறுப்பினர்களின் பதவியேற்பையும் தடுப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.