ஒரு டாலருக்கு ரூ.225 – வரலாறு காணாத வீழ்ச்சி கண்ட பாகிஸ்தான் நாணயம்!!
பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. அதாவது பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 225 கொடுத்தால் தான் ஒரு அமெரிக்க டாலர் வாங்க முடியும். பாகிஸ்தானில் சமீப காலமாக கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பசி, பட்டினி தலை விரித்தாடுகிறது. உணவுப் பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. அந்நியச் செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு டாலர்களை உள்ளூர் பணமாக மாற்ற மக்கள் கள்ளச்சந்தைகளில் குவியத் தொடங்கியுள்ளனர். மின்வெட்டு சமாளிக்க முடியாத அளவுக்கு பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது.
இந்நிலையில், பிரதமர் ஷபாஸ் ஷெரீஃப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், சர்வதேச நிதியமான ஐஎம்எஃப் தனது கட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 6 புள்ளி 5 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதியை விடுவிக்க வேண்டும் என்றும், சர்வதேச நிதியத்திற்கு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச நிதியத்தின் திட்டம் ஒன்று தாமதமடைவதால் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு சரிவு கண்டு வருகிறது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, இந்த மாதத் தொடக்கத்தில் பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு 5.8 பில்லியன் டாலராக (இந்திய மதிப்பில் ரூ.47,560 கோடி) குறைந்தது. இது கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஆகும். அந்நிய செலாவணி கையிருப்புக் குறைந்துள்ள நிலையில், வெளிநாடுகளிலிருந்து பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு பாகிஸ்தான் உள்ளாகி இருக்கிறது.
வெளிநாடுகள் மற்றும் ஐஎம்எஃப் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடமிருந்து பெற்ற கடனை பாகிஸ்தானால் திருப்பிச் செலுத்த முடியாத சூழலில் உள்ள பாகிஸ்தான் ஐஎம்எஃப் நிதித் திட்டம் மீள முடியுமா என்று எதிர்நோக்கியுள்ளது. இலங்கை எப்படி அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லாமல் வீழ்ச்சியை சந்தித்ததோ அதே சூழலுக்கு பாகிஸ்தானும் தள்ளப்பட்டு வருகிறது.