அமெரிக்காவில் கருப்பின வாலிபரை போலீசார் தாக்கி கொன்ற வீடியோ வெளியீடு!!
அமெரிக்காவின் மெம்பிஸ் பகுதியில் கருப்பின வாலிபர் டயர் நிக்கோலஸ் (வயது29) என்பவர் காரை விதியை மீறி ஓட்டியதாக போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது நிக்கோலசை 5 போலீஸ்காரர்கள் சரமாரியாக தாக்கினார்கள். இதில் படுகாயம் அடைந்த நிக்கோலஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தொடர்ந்து, அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். கருப்பின வாலிபரை போலீசார் தாக்கி கொன்ற சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வாலிபரை தாக்கிய 5 போலீசாரும் நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்தநிலையில் நிக்கோலசை போலீசார் பிடித்து சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
அவரை தாக்கும் 5 போலீசாரும் கருப்பினத்தைச் சேர்ந்தவர்கள். காரில் செல்லும் நிக்கோலசை போலீசார் தடுத்து நிறுத்துகிறார்கள். அவரை கைது செய்ய முயற்சிக்கும் போது தான் தவறு செய்யவில்லை. வீட்டுக்குத்தான் செல்கிறேன் என்று கூறி நிக்கோலசை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனால் அவரை போலீசார் பலமாக தாக்குகிறார்கள். அவரது முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடிக்கிறார்கள்.
பின்னர் நிக்கோல்சை முகத்தில் சரமாரியாக தாக்குகிறார்கள். கைகள் பின்புறம் விலங்கிட்ட நிலையில் மயங்கியபடி கீழே விழுந்து கிடக்கும் நிக்கோலஸ் ஒரு கட்டத்தில் அழுதபடி அம்மா அம்மா என்று கதறுகிறார். அதன் பிறகு அவரை மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து செல்கிறார்கள். கடந்த 2020-ம் ஆண்டு கருப்பின வாலிபர் ஜார்ஜ் பிளாய்ட்டை போலீசார் தாக்கி கொன்றதால் பெரும் போராட்டங்கள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.