சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு பொது மக்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்!!
சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பதற்குப் பொது மக்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோருவது தொடர்பான பத்திரிகை விளம்பரங்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி வெளியிட அரசியலமைப்பு பேரவை தீர்மானித்துள்ளது.
குறித்த விண்ணப்ப மாதிரி படிவம் பாராளுமன்ற உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அரசியலமைப்பு பேரவை இன்று (30) திங்கட்கிழமை காலை பாராளுமன்றக் கட்டத்தொகுதியில் இரண்டாவது முறையாக கூடியது.
அரசியலமைப்பு பேரவை கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதியின் பிரதிநிதி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அரசாங்கத்தின் பிரதிநிதி சாகர காரியவசம், உட்பட சிவில் பிரஜைகளின் பிரதிநிதிகளான கலாநிதி பிரதாப் இராமானுஜம், கலாநிதி தில்ருக்ஷி அனுலா விஜேசுந்தர,கலாநிதி தினேஷா சமரரத்ன ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
உயர்நீதிமன்ற நீதியரசர் எல்.ரி.பி.தெஹிதெனிய ஓய்வுப் பெற்றதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி கே.பி பெர்னாந்துவை நியமிக்கவும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி என்.பி.பீ.டி.எஸ்.கருணாரத்னவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராகவும், மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.ஆர.மரிக்காவை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ஜனாதிபதி முன்வைத்த பரிந்துரைகளுக்கு அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக அனுமதி வழங்கியது.
அரசியலமைப்பின் 41 ஆவது பிரிவின் கீழ் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பதற்குப் பொது மக்களிடமிருந்து விண்ணப்பங்களை கோருவது தொடர்பான பத்திரிகை விளம்பரங்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி பிரசுரிக்க பேரவை தீர்மானித்துள்ளது.
குறித்த விண்ணப்ப மாதிரிப் படிவம் பாராளுமன்ற உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும். பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.