ஆஸி.யில் காலிஸ்தான் வாக்கெடுப்பில் மோதல்: நடவடிக்கை எடுக்க இந்தியா கோரிக்கை!!
ஆஸ்திரேலியாவில் காலிஸ்தான் அமைப்பினர் நடத்திய வாக்கெடுப்பில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக சீக்கியர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். ஆஸ்திரேலியாவில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கை மற்றும் இந்து கோயில்கள் மீதான காலிஸ்தான் அமைப்பின் தாக்குதல்களை தடுத்து நிறுத்தும்படி இந்தியா தரப்பில் ஏற்கனவே ஆஸ்திரேலிய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் பெடரேஷன் சதுக்கத்தில் சுதந்திரமான பஞ்சாப் கோரும் காலிஸ்தான் அமைப்பினரின் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அப்போது காலிஸ்தான் எதிர்ப்பாளர்கள் தேசியக்கொடியை கையில் ஏந்தியபடி அங்கு வந்தனர். இதனால் மோதல் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த விக்டோரியா போலீசார், இரண்டு குழுவினர்களையும் கலைந்து போக செய்தனர். இதில் சீக்கியர்கள் இருவர் காயமடைந்தனர். மேலும், மோதலில் ஈடுபட்ட பல சீக்கியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த மோதல் போக்கு குறித்து கவலை தெரிவித்துள்ள இந்தியா இது தொடர்பாக காலிஸ்தான் அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆஸ்திரேலிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.