அரை நிர்வாணக் கோலத்தில் விமானத்தில் நடமாடி இடையூறு – இத்தாலியப் பெண்ணை கைது செய்த மும்பை காவல்துறை!
அணிந்திருந்த உடைகளில் சிலவற்றை கழற்றி எறிந்து, அரை நிர்வாண கோலத்தில் விமானத்தில் நடமாடி இடையூறு விளைவித்தமை தொடர்பில் இத்தாலியை சேர்ந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம், அபுதாபியில் இருந்து மும்பைக்கு வந்த விமானமொன்றில் இடம்பெற்றுள்ளது.
விமானம் மும்பையில் தரையிறங்கியதும், விமான ஊழியர்களால் காவல்துறைக்கு முறைப்பாடு வழங்கப்பட்டதோடு, மும்பை விமான நிலைய காவல்துறை குறித்த பெண்ணை கைது செய்துள்ளது.
அபுதாபியில் இருந்து மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை வந்த விமானத்தில் இத்தாலியைச் சேர்ந்த பவோலா பெருச்சியோ எனும் பெண் பயணித்துள்ளார்.
ஆரம்பத்தில் சாதாரண இருக்கையில் அமர்ந்துள்ளார், பின்னர் விமானம் புறப்பட்டதும் எழுந்து சென்று முதல் வகுப்பு இருக்கையில் அமர முயற்சித்துள்ளார்.
இதனை விமானத்தின் ஊழியர் தடுக்க, அவருக்கு கன்னத்தில் அறைந்துள்ளதுடன், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தனது ஆடைகளை கழட்டி எறிந்து அரைநிர்வாணக் கோலத்தில் விமானத்தில் அங்குமிங்கும் நடமாடி இடையூறு விளைவித்துள்ளார்.
குறித்த செயலுக்காக மும்பை காவல்துறை அந்தப் பெண்ணை கைது செய்துள்ளதுடன், விமானத்தின் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகவும், சக பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் இத்தாலியப் பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.