செல்போன் ஒட்டு கேட்கப்படுவதாக ஜெகன்மோகன் ரெட்டி மீது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு!!
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன்களை ஒட்டு கேட்பதாக ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதேபோல் ஐகோர்ட்டு நீதிபதிகளின் செல்போன்களையும் ஒட்டு கேட்பதாக கூறி கடந்த 2020 ஆம் ஆண்டு பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி ஆளும் கட்சி இதுபோல் செல்போன்களை ஒட்டு கேட்க கூடாது என கூறி இருந்தார்.
இந்நிலையில் நெல்லூர் மாவட்டம், உதயகிரி எம்.எல்.ஏ. மேகவதி சந்திரசேகர் ரெட்டி நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆந்திராவில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களாக உள்ள 35 பேர், 4 எம்.பி.களின் செல்போன் எண்கள் ஒட்டு கேட்கப்படுகிறது. மேலும் அவர்களது செல்போன் உரையாடல்களை டிராக் செய்து ரெக்கார்டிங் செய்யப்படுகிறது. நான் எனது நண்பருடன் பேசிய பேச்சை பதிவு செய்ததற்கான ஆதாரத்தை வெளியிட்டுள்ளேன் ஒய்.எஸ்.ஆர்.
காங்கிரஸ் கட்சிக்காக அத்தனை எம்.எல்.ஏ.க்களும் கடுமையாக உழைத்து ஆட்சி அமைத்து உள்ளனர். அப்படி இருக்கையில் தங்களுடைய கட்சி எம்எல்ஏக்கள் செல்போன் உரையாடலை ஒட்டு கேட்பது வருத்தம் அளிக்கிறது. எங்கள் மீது சந்தேகம் இருக்கும் போது நாங்கள் எப்படி கட்சிக்கு உண்மையாக பாடுபட முடியும் என்றார். ஜெகன்மோகன் ரெட்டி மீது அவரது கட்சி எம்.எல்.ஏ.வே குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.