;
Athirady Tamil News

4 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தஞ்சம்!!

0

யாழ்ப்பாணம் – புங்குடுதீவை சேர்ந்த ஜெய பரமேஸ்வரன் (43), அவரது மனைவி மாலினி தேவி (43) மற்றும் அவரது 12 வயது மகள், 7 வயது மகன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நேற்று (3) மாலை படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அருகே உள்ள ஒத்தப்பட்டி தெற்கு கடற்கரைக்கு நள்ளிரவு வந்திறங்கி கடற்கரை அருகே உள்ள மீனவர் குடிசையில் தஞ்சமடைந்தனர்.

தகவலறிந்து தனுஷ்கோடி ஒத்தப்படடிக்கு சென்ற தனுஷ்கோடி பொலிஸார் மற்றும் க்யூ பிரிவு பொலிஸார் இலங்கை தமிழர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் குழந்தைகளை வைத்துக் கொண்டு இலங்கையில் வாழ வழி இல்லை என்ற நிலையில் , தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் சந்தோஷமாக வாழ்வதையும் அவர்களது குழந்தைகள் நன்கு படிக்கும் வீடியோ பார்த்து குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு குடும்பத்துடன் புகலிடம் தேடி வந்ததாக தெரிவித்தார்.

மேலும் ஜெய பரமேஸ்வரனின் மனைவி மாலினி தேவிக்கு இருதய நோய் உள்ளதால் இலங்கையில் மருத்துவ செலவு செய்ய இயலாததால் வாழ்ந்தால் தமிழகத்தில் அகதியாக வாழ்வோம் அல்லது தமிழகம் செல்லும் போது கடலில் விழுந்து இறந்து விடுவோம் என உயிரை பணயம் வைத்து குடும்பத்துடன் தமிழகம் வந்ததாக தெரிவித்தார்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு 4 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.