சீனாவின் உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா !!
அமெரிக்கா முழுவதும் உள்ள முக்கிய இராணுவ தளங்களை உளவு பார்த்ததாக கூறப்படும் இராட்சத சீன பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது.
பாதுகாப்புத் துறை, அதன் போர் விமானங்கள் அமெரிக்க கடல் எல்லையில் பலூனை வீழ்த்தியதை உறுதிப்படுத்தியது.
சனிக்கிழமையன்று இராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதால் வடக்கு மற்றும் தெற்கு கரோலினா கடற்கரையில் மூன்று விமான நிலையங்கள் மூடப்பட்டன மற்றும் வான்வெளி மூடப்பட்டது.
AP செய்தி நிறுவனத்தில் இருந்து வெளியான காட்சிகள் சிறிய வெடிப்புக்குப் பின்னர் பலூன் கடலில் விழுவதைக் காட்டியது.
இதேவேளை மொன்டானாவில் காணப்பட்ட உளவு பலூன் போல் லத்தீன் அமெரிக்காவிலும் ஒரு உளவு பலூனை பார்த்ததாக பென்டகன் நேற்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் சீனாவோ அது உளவு பலூன் அல்ல வானிலை ஆய்வுக்காக தாங்கள் அனுப்பிய விண் ஓடம் என்றும், தவறுதலாக திசை மாறி அமெரிக்க வான்வழிக்குள் வந்துவிட்டது என்றும் விளக்கம் அளித்தது. அதோடு இந்த விவகாரத்தை அமைதியாகவும், பொறுமையாகவும் கையாள வேண்டும் எனவும் அமெரிக்காவை சீனா வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
வோஷிங்டனுக்கும் பீஜிங்கிற்கும் இடையே ஏற்பட்டுள்ள பதட்டங்களுக்கு மத்தியில் பலூன் அமெரிக்காவிற்கு வந்துள்ளது, வெளியுறவுத்துறை செயலாளர் அன்ரனி பிளிங்கன் இந்த விவகாரம் தொடர்பாக சீனாவிற்கான பயணத்தை நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.