நிதி வழங்காவிடின் நீதிமன்றை நாடுவோம் !!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான இந்த மாத அடிப்படைச் செலவுகளுக்கு 77 கோடி ரூபாயை வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு திறைசேரி செயலாளர் இதுவரை பதிலளிக்கவில்லை என்றும் உரிய பதில் அளிக்காவிட்டால் நீதிமன்றத்தில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட நிதியை வழங்குமாறு ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா நிதி அமைச்சிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அடிப்படைச் செலவுகளுக்கு குறித்த தொகை செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளதாகவும் ஒரே தடவையாகவோ அல்லது தவணை முறையிலோ குறித்த தொகையை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அவரது கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
தேர்தலின் போது அடிப்படை கடமைகளை ஆற்றும் அரசாங்க அச்சக திணைக்களம், பொலிஸ் திணைக்களம், தபால் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு முற்பணமாக செலுத்துவதற்காகவே இந்தத் தொகை கோரப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
தேர்தல் ஆணைக்குழுவிடம் தேர்தல் செலவுக்காக 4 கோடி ரூபாயை நிதி அமைச்சு வழங்கியுள்ள நிலையில், முழு நடவடிக்கைகளுக்காக 400 கோடி ரூபாய் செலவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கிடைக்காவிட்டால் தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் என்பதுன், திறைசேரி செயலாளர் பதிலளிக்காவிடின் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.