துருக்கி – சிரியா நிலநடுக்கம்: “இடிபாடுகளில் குரல் கேட்கிறது, காப்பாற்ற யாரும் இல்லை”!!!
தென்கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்தவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், அங்கு நிலவும் கனமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக மீட்புப்பணி பாதிக்கப்பட்டுள்ளது.
திங்கள் கிழமை அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியா எல்லையில் 4,300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். 15,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் உடல்களை மீட்புக்குழுவினர் இன்னும் கண்டெடுத்து வருவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
பேரிடர் ஏற்பட்ட பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் கட்டடங்களுக்குள் செல்வதற்கே அஞ்சிக் கொண்டிருக்கின்றனர்.
திங்கள் கிழமை அதிகாலை 4:17 மணியளவில் துருக்கியின் காசியன்டெப் நகரில் 7.8 ரிக்டர் அளவில், 17.9 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பான யு.எஸ். ஜியாலஜிக்கல் சர்வே தெரிவித்துள்ளது.
துருக்கியில் இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் மிக மோசமான நிலநடுக்கம் இது என நிலநடுக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது வரை துருக்கியில் குறைந்தது 2,291 பேர் இந்த நிலநடுக்கத்தால் பலியாகியுள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வு சுமார் 2 நிமிடங்கள் நீடித்ததாக, அதில் உயிர் பிழைத்தவர்கள் கூறியுள்ளனர்.
துருக்கியின் காரமன்மராஸ் மாகாணத்தில் உள்ள எல்பிஸ்டான் மாவட்டத்தில் திங்கள்கிழமை 7.5 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் பதிவானது.
நிலநடுக்கத்தால் யாரேனும் உயிர் பிழைத்துள்ளனரா என இடிபாடுகளுக்கிடையே தங்களின் வெறும் கைகளால் தோண்டி மீட்புப்பணியில் மீட்புக்குழுவினர் சிலர் ஈடுபட்டனர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட மையப்பகுதிக்கு அருகே அமைந்துள்ள ஒஸ்மானியே நகரில் கனமழை காரணமாக தேடுதல் பணி தடைபட்டது.
கடும் குளிர் மற்றும் மழைக்கு நடுவே அந்நகரில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது.
உறையும் குளிருக்கு நடுவே சாலையில் முகாம் அமைத்துத் தங்கியுள்ள நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பம், மீண்டும் கட்டடத்திற்குள் செல்லவே அஞ்சிக் கொண்டிருக்கின்றனர்.
நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏற்படும் சிறிய அளவிலான நில அதிர்ச்சியின்போது, அந்தக் குடும்பத்தினர் அச்சத்தின் காரணமாக சாலைக்கு நடுவே சென்றுவிடுகின்றனர்.
தங்கள் உணவகத்தில் தங்கியிருந்த 14 பேரில் ஏழு பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாக, உணவக உரிமையாளர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
மீட்புப் பணிகளுக்காக சிறப்பு குழுக்கள், மோப்ப நாய்கள், உபகரணங்களை வழங்கி உலக நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றன.
ஆனால், துருக்கியில் உள்ள மூன்று விமான நிலையங்களும் குறிப்பிடத்தக்க அளவு பாதிக்கப்பட்டுள்ளதால், இத்தகைய உதவிகள் வந்து சேர்வதில் சவால்கள் ஏற்பட்டுள்ளன.
வடக்கு சிரியாவில் இந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 1,400 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான சிரியா அகதிகள் முகாம்களில் தங்கியிருந்தனர்.
இந்தப் பகுதியின் கட்டுப்பாடு சிரியா அரசாங்கம், குர்திஷ் படையினர், மற்ற புரட்சிக் குழுக்கள் என மூன்று தரப்பிடமும் உள்ளது. நிலநடுக்கத்திற்கு முன்பிருந்தே, உறைய வைக்கும் குளிர், காலரா தொற்று நோய், மோசமான உள்கட்டமைப்பு ஆகியவற்றால் சிரியா அகதிகள் பாதிக்கப்பட்டிருந்தனர்.
நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட அச்சத்தால் தங்களால் எங்கும் செல்ல முடியவில்லை என, அலெப்போ நகரைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர்.
அலெப்போவில் சேதமடைந்துள்ள கட்டடங்கள்
ஜண்டைரிஸ் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தன் குடும்பத்தினர் 12 பேர் இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்ததாக, ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் தெரிவித்தார். தன்னுடைய குடும்பத்தினர் இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருப்பதாக, மற்றொரு நபர் தெரிவித்தார்.
“அவர்களின் குரல் கேட்கிறது. அவர்கள் உயிருடன் தான் இருக்கிறார்கள். ஆனால், காப்பாற்ற யாரும் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.
வடக்கு சிரியாவின் இட்லிப்பில் அமைந்துள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையில் கடந்த ஏழு ஆண்டுகளாகப் பணியாற்றியவர் பிரிட்டனை சேர்ந்த ஷஜுல் இஸ்லாம். பிபிசி ரேடியோ 4-இன் ‘தி வேர்ல்ட் டுநைட்’ நிகழ்ச்சியில் பேசிய அவர், தங்கள் மருத்துவமனை மிக மோசமான மரணங்களை இந்த நிலநடுக்கத்தால் சந்தித்துள்ளதாகத் தெரிவித்தார்.
“எங்கள் மருத்துவமனை நிரம்பியுள்ளது. சுமார் 300-400 பேர் தற்போது எங்கள் மருத்துவமனையில் உள்ளனர். ஒரு படுக்கைக்கு இரண்டு முதல் மூன்று பேர் உள்ளனர்,” எனத் தெரிவித்தார்.
மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ள 40-45 பேரை, தான் ஐசியூவுக்கு அழைத்துச் சென்றதாக அவர் தெரிவித்தார். “மற்றவர்களிடமிருந்து வென்டிலேட்டரை அகற்றி, உயிர் பிழைக்க அதிக வாய்ப்புள்ளவர்களுக்குப் பொருத்துகிறோம். மருத்துவமனையின் நுழைவு வாயிலில் இருந்துகொண்டு யாரைக் காப்பாற்ற முடியும் என்பது குறித்து முடிவு செய்கிறோம்,” எனத் தெரிவித்தார்.
சிரியாவில் நிலநடுக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியாக இட்லிப் உள்ளது.
சர்வதேச உதவிக்காக வேண்டுகோள் விடுத்த நிலையில், 45 நாடுகள் உதவி செய்ய முன்வந்துள்ளதாக, துருக்கி அதிபர் ரிசெப் தையிப் எர்டோகன் தெரிவித்தார்.
ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ் சர்வதேச உதவிக்காக அழைப்பு விடுத்தார். பேரழிவால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் “ஏற்கெனவே உதவியை அணுகுவதில் சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், அப்பகுதிகளில் மனிதாபிமான உதவி தேவை,” என்று அவர் தெரிவித்தார்.
துருக்கிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்களை அனுப்பியுள்ளது. மேலும், நெதர்லாந்து மற்றும் ரொமானியாவை சேர்ந்த மீட்புக்குழுவினர் துருக்கிக்கு செல்கின்றனர். 76 பேர் அடங்கிய சிறப்புக்குழு, உபகரணங்கள், மீட்பு நாய்கள் உள்ளிட்டவற்றை அனுப்புவதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ், ஜெர்மனி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் உதவி செய்வதாக அறிவித்துள்ளனர். ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளுக்கும் உதவுவதாக அறிவித்துள்ளார். அவ்வாறே இரானும் தெரிவித்துள்ளது.
உலகத்தில் நிலநடுக்கம் அதிகமாக ஏற்படும் நாடுகளுள் ஒன்று துருக்கி.
அந்நாட்டின் வட-மேற்குப் பகுதியில் 1999ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 17,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அதேபோன்று, கிழக்கு மாகாணமான எர்ஸின்கன் பகுதியில் 1939ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 33,000 பேர் கொல்லப்பட்டனர்.
தற்போது ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சைப்ரஸ், லெபனான் மற்றும் இஸ்ரேல் வரை உணரும் வகையில் மிக மோசமானது.