சர்ச்சை பேச்சுக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மன்னிப்பு கேட்க வேண்டும் – மத்திய மந்திரி வலியுறுத்தல்!!
பாராளுமன்ற மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பேசுகையில், பாராளுமன்றத்திற்கு புறம்பான வார்த்தையைப் பயன்படுத்தி சர்ச்சையை கிளப்பினார். மக்களவையில் கவுதம் அதானியின் நிறுவனங்கள் குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான அரசாங்கத்தை அவர் சாடினார். அனைத்து விஷயங்களிலும் முழுமையான விசாரணைக்கு உத்தரவிடுங்கள். நமது நாட்டின் நற்பெயர் மற்றும் நமது சந்தைகளின் அமைப்பு ஸ்திரத்தன்மை ஆபத்தில் உள்ளன. இவை அனைத்தையும் முழுமையாக அனைத்து அம்சங்களிலும் விசாரிக்க வேண்டும் என கூறினார்.
அப்போது அவர் பேசுகையில், சில பாஜகவினர் சில கருத்துக்களை கூறியுள்ளனர். மஹுவா மொய்த்ரா தனது உரைக்கு இடையூறு விளைவித்த நாடாளுமன்ற உறுப்பினரை வாயை மூடுமாறு சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டார். மேலும், அவர் சில கடுமையான வார்த்தைகளை உபயோகித்ததால், மக்களவையில் சலசலப்பு ஏற்பட்டது. பாஜக எம்பி ரமேஷ் பிதுரி குறித்து மஹுவா மொய்த்ரா சில நாடாளுமன்றத்திற்கு மாறான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். இதைத் தொடர்ந்து, பாஜக எம்பிக்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில், பாராளுமன்றத்தில் பேசிய தனது பேச்சுக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி வலியுறுத்தியுள்ளார்.