மெரினாவில் பேனா நினைவு சின்னத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு!!
கருணாநிதியின் எழுத்தாற்றலை போற்றும் வகையில் கடலுக்கு நடுவே பேனா சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளன. சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பேனா நினைவு சின்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் பேசினார்கள். இந்த நிலையில் பேனா நினைவு சின்னத்துக்கு எதிராக தமிழக மீனவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது தொடர்பாக சென்னையை சேர்ந்த தங்கம், ராமநாதபுரத்தை சேர்ந்த நல்லதம்பி உள்ளிட்ட மீனவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறி இருப்பதாவது:
கருணாநிதிக்கு மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக மக்களின் கருத்தை அறியாமல் இந்த சின்னம் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மீனவர்களின் கருத்தை அறியாமல் இந்த சின்னத்தை அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது. கடலில் இந்த 134 அடி உயரம் கொண்ட நினைவு சின்னம் அமைப்பது என்பது தவறானது. இயற்கை நீதிக்கு எதிரானது. இந்த நினைவு சின்னம் மற்றும் அதற்கான பாதை கட்டுமானங்கள் அமைப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதேபோல் இந்த சின்னம் அமைப்பது சி.ஆர்.இசட். மண்டலத்துக்குள் வருவதால், இது கடல் வளத்தை பாதிக்கும், கடல் வளம் பாதிக்கும் என்பதை அறிந்தும் பொதுப் பணித்துறை அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே பல சூழியலாளர்கள் இந்த விவகாரத்தில் ஆட்சேபனை தெரிவித்தும் அதனை தமிழக அரசு கருத்தில் கொள்ளவில்லை. மேலும் சென்னை மாநகரில் நினைவிடங்கள் அமைக்க பல்வேறு இடங்கள் உள்ளன. அவ்வாறு இருக்கையில் மெரினா கடலில் நினைவு சின்னம் அமைப்பது கடல் வளத்தையும், கடலின் சூழலையும் கடுமையாக பாதிக்கும். பேனா நினைவு சின்னத்தை உருவாக்குவதால் அது கடலையே வாழ்வாதாரமாக நம்பி உள்ள 32 மீனவ கிராமங்களை பாதிக்கும். எனவே பேனா நினைவுச் சின்னத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீது விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.