மாவட்ட, உதவி தேர்தல் ஆணையாளர்கள் நாளை ஆணைக்குழுவிற்கு!!
மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் நாளை (11) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான அடிப்படை செயற்பாடுகள் குறித்து இங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
இதேவேளை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான செலவீனங்கள் தொடர்பில் நிதியமைச்சின் செயலாளர் விடுத்த கோரிக்கைக்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் நடவடிக்கைகளுக்காக பெப்ரவரி மாதத்திற்கு 770 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக நிதி அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்ததாக அதன் தலைவர் நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்தார்.
இதேவேளை, தேர்தல் தொடர்பான நிதி ஒதுக்கீடுகளை விரைவில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வழங்குமாறு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக பெப்fபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
மார்ச் 19 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்கள் நிறுவப்படாவிடின் அவை ஆணையாளரின் கட்டுப்பாட்டில் இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தேர்தலை தாமதப்படுத்தினால் இவ்வாறானதொரு நிலை ஏற்படக்கூடும் என பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.