யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தீர்வையற்ற கடை திறந்துவைப்பு!! (படங்கள்)
பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இன்றைய தினம் தீர்வையற்ற கடை(Dutyfree) திறந்து வைக்கப்பட்டது.
தீர்வையற்ற கடையினை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சந்திர சிறீ பயணி ஒருவருடன் இணைந்து நாடா வெட்டி திறந்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் வடபிராந்திய சுங்கத் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் யாழ்ப்பாண பலாலி விமான நிலையத்தின் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
விரைவில் சென்னை- பலாலி இடையிலான விமான சேவை அதிகரிக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சந்திர சிறீ தெரிவித்தார்.
யாழில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பலாலி விமான நிலையத்தில் தீர்வைற்ற கடையினை திறந்து வைத்தமையையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
பலாலி விமானத்தின்ஊடாக பயணிக்கும் பயணிகளுக்காக மேலும் பல வசதிகளை ஏற்படுத்த உள்ளோம். தற்போது நான்கு விமான சேவைகள் மாத்திரமே வாரத்தில் இடம்பெறுகின்றன எதிர்வரும் காலங்களில் ஏழு விமான சேவைகள் ஒரு வாரத்தில் இடம் பெறுவதற்குரியவாறு எயாலைன்ஸ் நிறுவனத்தினருக்கு அறிவுறித்தியுள்ளோம்.
அதேபோல இரத்மனாலை பலாலிக்கிடையிலான உள்ளூர் விமான சேவையினையும் விரைவில் ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கை எடுத்துள்ளோம் .
அத்தோடு பலாலி விமான நிலையத்தினை மேலும் விஸ்திரித்து இங்கே பயணிக்கும் பயணிகளுக்கும் மேலும் பல வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நாங்கள் முயற்சிகளை எடுத்துள்ளோம்.
வர்த்தக ரீதியில் மேலும் பல அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இன்று முதலாவது தீர்வையற்ற கடை திறக்கப்பட்டுள்ளது அதேபோல மேலும் பல கடைகள் இந்த அரசாங்கத்தின் அனுமதியோடு திறப்பதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம்.
அதில் அழகு சாதன பொருட்கள் மற்றும் மேலும் பல பொருட்கள் அடங்கிய தீர்வையற்ற கடைகள் இங்கே திறக்கப்படவுள்ளன.
பலாலி விமான நிலையத்தை மேலும் விஸ்தரித்து பயணிப்போர் மிகவும் வசதியாக பயணிப்பதற்கு முயற்சிக்கின்றோம்.
தீர்வையற்ற கடைகளுக்காக ஒரு தனியான கட்டட தொகுதியினை அமைக்கவுள்ளோம் அதேபோல் விமானத்திற்குள் உள் நுழையும் வெளியேறும் பாதைகள் விஸ்தரிக்கப்பட்டு பயணிகள் சௌகரியமாக பயணிக்கக் கூடியவராக ஏற்பாடுகள் மேற்கொள்ள உள்ளோம்.
அத்தோடு இன்று முதலாவது தீர்வையற்ற கடை திறக்கப்பட்டுள்ளது அதேபோல மேலும் பல தீர்வை யற்ற கடைகளை திறப்பதற்கு யோசித்திருக்கின்றோம் அதற்கு ஒரு நடைமுறை உள்ளது குறிப்பாக சுங்கம் மற்றும் அரசாங்கத்தின் கேள்விகோரல் முறையின்படி உரியபடி விண்ணப்பித்து தீர்வையற்ற கடைகளுக்குரிய அனுமதியினை பெற்றுக் கொள்ள முடியும் .
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களும் இந்த நடைமுறைகளை பின்பற்றி தீர்வையற்ற கடைகளுக்கான அனுமதியினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”