மோடி குறித்த சர்ச்சை ஓய்ந்த நிலையில் ‘தி ஷமீமா பேகம் ஸ்டோரி’ ஆவணப்படம் ரிலீஸ்: அடுத்தடுத்த சர்ச்சைகளை கிளப்பும் பிபிசி!!
மோடி குறித்த ஆவணப்பட சர்ச்சை ஓய்ந்த நிலையில் தற்போது ‘தி ஷமீமா பேகம் ஸ்டோரி’ என்ற பெயரில் ஷமீமா பேகம் என்ற பெண் தொடர்பான ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டுள்ளதால் புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது.
பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த காலகட்டத்தில் நடந்த கோத்ரா கலவரம் தொடர்பான ஆவணப்படத்தை இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி வெளியிட்டது. இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கும் இந்த ஆவணப்படம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
அதன் தொடர்ச்சியாக தற்ேபாது ‘தி ஷமீமா பேகம் ஸ்டோரி’ என்ற ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டுள்ளது. 90 நிமிடம் ஓடக்கூடிய இந்த ஆவணப்படத்தில் ஷமீமா பேகத்தின் வாழ்க்கை பயணத்தை குறிப்பிடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. வங்கதேச நாட்டை சேர்ந்த இங்கிலாந்தில் குடியுரிமை பெற்ற ஷமீமா பேகம் என்ற பெண் கடந்த 2015ம் ஆண்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்ததும், அதனால் அவரது இங்கிலாந்து குடியுரிமை பறிக்கப்பட்டது,
அவரது வாழ்க்கையில் நடந்த கோர சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ‘ஜிகாதி மணமகள்’ என்ற பெயரில் சர்வதேச ஊடகங்களால் அழைக்கப்படும் அந்தப் பெண்ணுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இந்த ஆவணப்படம் உள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறாக சர்ச்சைக்குரிய விஷயங்களை பிபிசி அடுத்தடுத்து கிளப்பி வருவதால், பிபிசி சந்தாதாரர்கள், அதற்கான சந்தாக்களை புதுப்பிக்க வேண்டாம் என்ற கோஷங்களும் அதிகரித்து எழுந்துள்ளன. பிபிசி-க்கு என்னாச்சு? என்று இங்கிலாந்து மட்டுமின்றி உலகளவில் பலரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.